முருகு சிட்டு

15 April 2026

Next →

ஜீவா செத்துப் போனான்..

நேற்று மாலை ஜீவா தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான்.. என்னிடம் சொல்லிவிட்டு போய் இருக்கலாம்…. அவனிடம் சொல்ல இன்னமும் ஒரு கூடை அன்பு உள்ளது என்னிடம்….. அட சீ அவன் என்ன சினிமாவுக்கா போனான்? தற்கொலை செய்து கொண்டான் அவனுக்கு மிகவும் பிடித்த ஜோதி விலாஸ் டீக்கடை போண்டாவை விட மரணம் பிடித்துப் போனது.. ஜீவா அவன் உண்மையான பெயர் என்ன? அவன் பணி புரிந்த போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் அது.. எதுவாயிருந்தால் என்ன? ஜீவன் உள்ள மனிதனுக்கு எல்லா பெயரும் பொருந்தும் தானே!!.. திருப்பூர் கூடைப்பந்து கழகத்தின் மூத்த உறுப்பினர். நண்பர்கள் சூழ எப்பொழுதும் பார்த்திருக்கிறேன் தோலின் நிறம் என்னவோ கருப்பு என்றாலும் மனம் முழுவதும் வெள்ளை ஒல்லியான தேகம்.. ஜீவா போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் வேலை….. பேருந்தில் கூட 40 பேர் சூழ செல்பவன் நேற்று தனியாக செத்துப் போனான்… சாவது என்றானபின் சொல்லிவிட்டா செல்ல முடியும்? சாவதற்கு முன் என்ன நினைத்திருப்பான்? என்னை பார்க்க வேண்டும் என்றா? என்னோடு மீண்டும் ஒரு நாள் ஒரு கோப்பை தேநீர் அருந்த வேண்டும் என்றா?? ஜோதி விலாஸ் போர்டு மீண்டும் நினைவில் வந்திருக்குமா... அப்படி என்ன அவசரம் அவனுக்கு ? வேகமாய் பேருந்து இயக்குவதில் நிபுணன் என்ற பெயர் உண்டு. ஒரு முறை ஏறினால் ஆயிரம் கிலோமீட்டர்ஸ் இல்லாமல் இறங்க மாட்டான். பேருந்து இயக்குவதும் வாழ்வும் ஒன்றா? வேகமும் அவசரமும் ஒரு காலை இழக்க வைத்து. இரண்டு வருடங்களில் அவன் வாழ்வை இழக்க வைத்து. போனவன் வாழ்க! போன பின் வாழ்த்துவோம்... யுவராஜ் சம்பத்...15.04.2026