13 June 2026
Next →தமிழுக்கென ஒரு ChatGPT போன்ற மொழி மாதிரி உருவாக்க முடியுமா?
தமிழுக்கென ஒரு ChatGPT போன்ற மொழி மாதிரி உருவாக்க முடியுமா?
தமிழக அரசு தமிழுக்கென ஒரு செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியை உருவாக்க முயற்சி செய்து வருவதாக அறிவித்துள்ளது. இதற்காக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி பலரிடமும் ஆர்வத்தையும், சிலரிடம் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழுக்காக உருவாக்கப்படும் இந்த மொழி மாதிரி, ChatGPT அல்லது Google Gemini போன்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு போட்டியாக உருவாக்கப்படுவதில்லை. அது தேவையும் இல்லை.
இது தமிழை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு மொழி மாதிரியாக இருக்கும். அரசு சேவைகள், கல்வி, மொழிபெயர்ப்பு, பேச்சை எழுத்தாக மாற்றுதல், குடிமக்கள் சேவை உதவியாளர் போன்ற பல பயன்பாடுகளுக்காக இது உருவாக்கப்படலாம்.
இன்றைக்கு பல திறந்த மூல (Open Source) செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே தமிழ்நாடு அனைத்தையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் தரவுகளைச் சேர்த்து ஒரு நல்ல தமிழ் மொழி மாதிரியை உருவாக்க முடியும்.
ஆனால் சவால்களும் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான சக்திவாய்ந்த கணினிகளும், GPU எனப்படும் உயர்தர கிராபிக்ஸ் கார்டுகளும் மிகவும் விலை உயர்ந்தவை. அதேபோல் தரமான தமிழ் தரவுகளும் போதுமான அளவில் இல்லை. சட்டம், மருத்துவம், கல்வி, அறிவியல் போன்ற துறைகளில் டிஜிட்டல் வடிவில் உள்ள தமிழ் தகவல்களை இன்னும் அதிகமாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
மேலும், இந்தத் துறையில் திறமையான பல தமிழ் பொறியாளர்கள் இந்தியாவின் பிற நகரங்களிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் இந்த முயற்சியுடன் இணைப்பதும் அவசியம்.
ஒரு மொழி மாதிரியை உருவாக்குவது மட்டுமே வேலை அல்ல. அதை தொடர்ந்து மேம்படுத்தி, புதுப்பித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுதான் பெரிய சவால்.
இருப்பினும், இந்த முயற்சியை வரவேற்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ஒரு மொழி உயிரோடு இருக்க வேண்டுமெனில் இலக்கியத்தில் மட்டும் வாழ்ந்தால் போதாது. புதிய தொழில்நுட்பங்களிலும் வாழ வேண்டும்.
இன்று செயற்கை நுண்ணறிவு, இணையம், மென்பொருள், குரல்வழி சேவைகள் போன்ற துறைகளில் தமிழ் வலுப்பெறவில்லை என்றால், நாளை அது வீட்டுக்குள் பேசப்படும் மொழியாக மட்டுமே சுருங்கிவிடும் அபாயம் உள்ளது.
உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் டிஜிட்டல் காலத்திலும் தமிழ் வலிமையுடன் வாழ வேண்டும். அதற்கான ஒரு சிறிய படியாக இந்த முயற்சி அமையட்டும்.
தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரி வெற்றி பெறும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
FB Post.. 13.06.2026