அன்னம்

18 June 2026

Next →

டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?

டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?

அறிமுகம்

நேற்று, பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை அமைப்பு தனது 'கிளவுட் ஸ்டோரேஜ்' (Cloud Storage) தரவுகளை அமெரிக்காவின் 'பாலண்டீர்' (Palantir) நிறுவனத்திலிருந்து, தங்கள் சொந்த நாட்டு நிறுவனமான 'சேஃப் விஷன்' (Safe Vision) என்ற நிறுவனத்திற்கு மாற்றியுள்ளது. இதைப்போலவே, கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஐரோப்பிய நிறுவனமும் தங்களுடைய தரவுகளைத் (Data) தங்கள் சொந்த நாட்டு நிறுவனங்களுக்கோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்கோ மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த உலகளாவிய சூழல், இந்தியாவிலும் 'சர்வம்' (Sarvam AI) போன்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்த ஒரு சிறிய ஆய்வுதான் இக்கட்டுரை.

சந்தேகத்தை ஏற்படுத்திய அமெரிக்காவின் நகர்வுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடுகளினால், பல்வேறு உலக நாடுகள் பல விஷயங்களில் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, ஒரு மாற்றுச் சிந்தனையை முன்வைக்கின்றன. சீனாவுடன் ட்ரம்பிற்கு இருக்கும் வர்த்தக ரீதியிலான மோதல்களும், ஈரானுடன் நேரடியாக இஸ்ரேலுக்காகப் போரில் ஈடுபடுவதும், உக்ரைனைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாடும் அமெரிக்காவின் மீதான சந்தேகத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளன. இது ஐரோப்பிய நாடுகளைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாகவே, உலக அரங்கில் 'டிஜிட்டல் இறையாண்மை' (Digital Sovereignty) பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

டிஜிட்டல் இறையாண்மை என்றால் என்ன?

டிஜிட்டல் இறையாண்மை என்பது, ஒரு நாடு தனது குடிமக்களின் மற்றும் அரசின் தரவுகளை எங்குச் சேமிக்க வேண்டும், அதற்கு எந்த மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும், அதை யார் யார் அணுகலாம் (Access) என்பதை அந்த நாடுதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கோட்பாடாகும்.

ஐரோப்பாவின் அச்சமும் 'டிஜிட்டல் காலனியாதிக்கமும்'

ஐரோப்பாவில் தற்போது டிஜிட்டல் இறையாண்மை என்பது வெறும் தொழில்நுட்ப விவகாரமாக இல்லாமல், அரசியல் மற்றும் பொருளாதார விவாதமாக மாறியிருக்கிறது. ஐரோப்பாவின் கிளவுட் சேவைகள், தரவு மையங்கள் (Data Centers) போன்றவற்றில் பெரும்பங்கு கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களிடம்தான் உள்ளது. ஐரோப்பியக் கிளவுட் சந்தையில் சுமார் 70% அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை ஐரோப்பியர்கள் 'டிஜிட்டல் காலனியாதிக்கம்' (Digital Colonialism) என்று வர்ணிக்கிறார்கள்.

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் போர்களின் போது, அந்தந்த நாடுகளின் தரவுகளை அமெரிக்கா முடக்கியது. இந்த நிலை என்றாவது ஒருநாள் தங்களுக்கும் வரக்கூடும் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. எனவே, அந்தத் தரவுகள் தங்கள் நாட்டிலேயே இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதுகின்றன.

ஐரோப்பாவின் சவால்களும் நடைமுறைச் சிக்கல்களும்

சீனா இந்த டிஜிட்டல் தனித்துவத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியதால், சீனாவின் பாதையை ஐரோப்பிய நாடுகளும் பின்பற்ற முயல்கின்றன. ஏற்கனவே, ஒரு சில உள்ளூர் ஏஐ (AI) மாதிரிகளையும், 'கயா எக்ஸ்' (Gaia-X) என்கிற ஐரோப்பிய நாடுகளின் கூட்டு கிளவுட் கட்டமைப்புத் திட்டத்தையும் அவை சோதனை செய்து பார்த்துள்ளன.

ஆனாலும், இவற்றுக்குத் தேவையான செயல்திறன் கொண்ட கணினி உள்கட்டமைப்புகளையும் (Hardware Infrastructure), பெரிய அளவிலான கிளவுட் முதலீடுகளையும் ஐரோப்பா இன்னும் செய்யவில்லை. அதற்குத் தேவையான கணினிச் சில்லுகள் (Computer Chips) தயாரிக்கும் வசதி கூட அவற்றிடம் இல்லை. மிகப்பெரிய பொருளாதார வசதியும், இதை முழுமையாகக் கட்டமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பும் தற்போது ஐரோப்பாவில் குறைவாகவே உள்ளன.

ஐரோப்பாவில் திறமையான மென்பொருள் பொறியாளர்களும், சிறந்த பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால், அங்குப் படிப்பவர்கள் அதிகச் சம்பளம் காரணமாக வெளிநாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள் (Brain Drain).

மேலும், அமெரிக்கர்களுடைய முதலீட்டுக் கொள்கை பெரும்பாலும் எதிர்கால லாபங்களை (Future Growth) முன்னிறுத்தியது; அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால், ஐரோப்பிய கலாச்சாரம் இதற்கு நேர் எதிரானது. இதனால் அங்கு எளிதாக முதலீடுகள் கிடைப்பதில்லை.

அமெரிக்கா என்பது ஒரே மொழி, ஒரே சந்தை கொண்ட நாடு. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் என்பது பல மொழிகளையும், பல வேறுபட்ட சட்டங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு. இதனால் ஐரோப்பிய நிறுவனங்களின் சந்தை எல்லை சுருங்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் தனிமனித உரிமை, அறநெறி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்துவதால், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

பொருளாதார அழுத்தங்கள்

தற்போது ஐரோப்பா ஒரே நேரத்தில் பல சவால்களைச் சந்தித்து வருகிறது:

  • விலைவாசி உயர்வு (Inflation)

  • எரிசக்தித் தட்டுப்பாடு (Energy Crisis)

  • தொழில்துறையில் மந்தநிலை (Recession)

  • இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை

  • உக்ரைன் போர் போன்றவற்றுக்கான அதிகப்படியான ராணுவச் செலவுகள்

இத்தகைய அழுத்தங்களால் அங்கு கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் தொழில்நுட்பத் துறைகளில் நீண்டகால முதலீடு செய்வதைத் தவிர்த்து, உடனடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உற்பத்தித் துறைகளில் (Manufacturing Sector) முதலீடு செய்வதே சிறந்தது என்று முடிவு எடுக்கத் தூண்டப்படுகின்றன.

 

 

மொழி மற்றும் உள்ளூர்மயமாக்கல் சவால்கள்

முதலீட்டாளர்களுக்கு ஐரோப்பா ஒரு பெரிய கண்டமாகத் தெரிந்தாலும், நடைமுறை யதார்த்தம் வேறுபட்டது. இங்குப் பல மொழிகளில் ஏஐ மாதிரிகள் (AI Models) உருவாக்கப்பட வேண்டும். மொழி மாதிரிகள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்போது, ஜெர்மன் அல்லது பிரெஞ்சு மொழியின் மரபுத்தொடர்கள், கலாச்சார நுணுக்கங்கள் மற்றும் வணிகக் கலைச்சொற்களைக் கையாள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஐரோப்பியத் தொழில்முனைவோர் (Startups) உள்ளூர்மயமாக்கப்பட்ட தரவுப் பொறியியல் (Localized Data Engineering) மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.

மேலும், ஏஐ தரவு நிறுவனங்கள் தங்களது குழுக்களைத் தடையின்றி, வேகமாக வேலைக்கு அமர்த்தி விரிவாக்கம் செய்வதற்கு உகந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் தேவை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒவ்வொரு நாடும் தனித்தனிச் சட்டங்களைக் கொண்டுள்ளதால், நிறுவனங்கள் அவற்றை உலகளாவிய அளவில் விரிவுபடுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை ஐரோப்பிய யூனியனுடன் ஏதேனும் ஒரு நாடு வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) மேற்கொண்டாலும், அது யூனியனில் உள்ள 27 நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.

இந்திய தொழில்நுட்பச் சூழலில் இதன் தாக்கம்

டிஜிட்டல் இறையாண்மை என்பது அரசாங்கங்களுக்கு மட்டுமானது அல்ல; அது சாதாரண மக்களின் தனிமனித உரிமையோடும் தொடர்புடையது.

சமீபத்தில், அமெரிக்க அரசு விதித்த அவசர ஏற்றுமதி கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக, 'ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனம் தனது மிகச் சக்திவாய்ந்த மாடல்களான 'மைத்தோஸ் 5' (Mythos 5) மற்றும் 'டேபிள் 5' (Table 5) ஆகிய இரண்டையும் உலக அளவில் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இந்த முடக்கம் அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடியுரிமை கொண்டவர்களுக்கும், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஏற்றுமதி மீது அமெரிக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், இந்தியத் தொழில்நுட்பச் சூழலிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால், இந்திய அரசும் தற்போது உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க மிகப்பெரிய நிதியுதவிகளை வழங்கி வருகிறது.

இந்திய அரசும் அமெரிக்க நிறுவனங்களை மட்டுமே சார்ந்து இயங்க விரும்பவில்லை. வெளிநாட்டுத் தடைகளுக்கு அஞ்சாமல் இருக்க, இந்தியா தனக்கெனப் பிரத்யேகமான ஏஐ மாதிரிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதனால்தான் இந்திய அரசின் 'இந்தியா ஏஐ மிஷன்' (IndiaAI Mission) திட்டம் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

செமிகண்டக்டர் மற்றும் சிப் அரசியல்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் வெறும் மென்பொருளோடு (Software) நிற்பதில்லை; ஏஐ-க்குத் தேவையான செமிகண்டக்டர் சிப்புகள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்புகளிலும் (Supercomputing Infrastructure) வெளிப்படுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள மோதல் இதனை வெளிப்படையாகக் காட்டுகிறது.

'என்விடியா' (Nvidia) சிப்புகள் சீனாவிற்குச் செல்வதை அமெரிக்கா தடுக்கிறது. ஆனால், சீனா தன்னுடைய விஞ்ஞானிகளையும் பெரும் முதலீட்டையும் கொண்டு, அதற்கு இணையான சிப்புகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. தனது சொந்த கணினித் திறனை மேம்படுத்தப் பெரும் நிதியைச் சீனா செலவிடுகிறது. இந்தியாவில் இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது இன்னும் கேள்விக்குறியே.

இருப்பினும், சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளுக்குப் பாதுகாப்பான மாற்று உற்பத்தி மையம் (Alternative Manufacturing Hub) வேண்டுமென்றால், அவர்கள் இந்தியாவைத்தான் தேடி வர வேண்டும். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் அறிவு சார்ந்த மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கி வருகின்றன.

முடிவுரை "இன்று அவனுக்கு என்றால், நாளை நமக்கு" என்கிற அச்சம் உலக நாடுகளுக்கு இயற்கையாகவே உருவாகியுள்ளது. இது தானாகவே உருவானதா அல்லது அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்த அச்சத்தை உண்டாக்கினவா என்பது ஒரு 'மில்லியன் டாலர்' கேள்வி என்றாலும், கடந்த கால வரலாறுகள் இந்த பயத்தை உறுதிப்படுத்துகின்றன.

இத்தகைய சூழலில், அமெரிக்காவையும் சீனாவையும் ஒரே நேரத்தில் சமாளித்துத் தனித்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. இதற்குச் சட்டங்களில் தளர்வுகளையும், துணிகர முதலீட்டு (Venture Capital) கலாச்சாரத்தையும் ஐரோப்பிய நாடுகள் ஊக்குவிக்க வேண்டும். திறமையான பொறியாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதைத் தடுத்து, உள்ளூர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதன் மூலமே உண்மையான 'டிஜிட்டல் இறையாண்மையை' அடைய முடியும். ஐரோப்பாவும் இந்தியாவும் இதனைச் சாத்தியமாக்கும் என்று நம்புவோம்.

- யுவராஜ் சம்பத்

18 ஜூன் 2026