அன்னம்

20 November 2025

Next →

சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு சிறிய பங்கையாவது, இந்தியா, ட்ரம்ப் நடவடிக்கை மூலம் கைப்பற்ற இயலுமா?

சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு சிறிய பங்கையாவது, இந்தியா, ட்ரம்ப் நடவடிக்கை மூலம் கைப்பற்ற இயலுமா?

இறக்குமதி வரியை அதிகப்படுத்தியதன் மூலம் சீனாவின் பொருட்கள் அமெரிக்க மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் சூழலில் உண்மையிலேயே மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இந்தியாவுக்காக காத்திருந்தது.

ஆனால் அந்த வாய்ப்பை, நாம், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாத காரணத்தினால் தவற விட்டு விட்டோம் என்பதுதான் கசப்பான உண்மை. இந்த வர்த்தகப் போர் ஏதோ நேற்று தான் தொடங்கியது போலவும் அதனால் உடனடியாக அந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்த முடியாது என்பது போலவும் ஒரு கருத்து உருவாக்கம் ஏற்கனவே இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அப்படி அல்ல.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்று ஒரு சாராரும், அப்படி அமையப்போவதில்லை என்று மற்றொரு பிரிவினரும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கையில், இந்திய பொருளாதார வல்லுநர்கள் சிலர் இது சாதகமான நேரமாக இருந்தாலும், நம்முடைய கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத காரணத்தினால் எதிர்பார்க்கிற மிகப்பெரிய வெற்றியை தராது என்று கருதுகிறார்கள்.

சீனாவின் ஏற்றுமதி சற்றேறக் குறைய 450 பில்லியன் டாலர் நேரடியாகவும், மற்றும் வியட்நாம், மலேசியா, கம்போடியா, மெக்ஸிகோ, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தங்களுடைய நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்தது. இதை ஒப்பிடுகையில் இந்தியாவின் ஏற்றுமதி அமெரிக்காவுக்கு மிகவும் குறைவு - 86 பில்லியன் டாலர். காரணம் கடந்த காலங்களில் அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாட்டின் ஏற்றுமதியை எதிர்கொள்கிற அளவுக்கு இந்தியா தன்னுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என்பது தான் உண்மை. அடிப்படை வசதிகள் என்பது மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகள், சாலைப் போக்குவரத்து, மூலப்பொருள் உற்பத்தி, மிகப்பெரிய ஏற்றுமதியை சந்திக்கக்கூடிய அளவுக்கு தொழிலாளர்களுடைய திறன் பயிற்சி போன்றவை ஆகும். இது தவிர இறக்குமதி நிறுவனங்கள் விதிக்கிற பல்வேறு தரக் கட்டுப்பாடுகளுக்கும் இந்திய உற்பத்தியாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அந்த இலக்கை அடைவது இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஒரு தடையாகவே இருக்கிறது.

நாளை காலை அமெரிக்க அதிபர் இறக்குமதி வரி உயர்வைத் திரும்பப் பெற்றாலும், அந்த வர்த்தகப் போர் என்பது நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டு தான் இருக்கும். அதனால் தான், சீன அதிபர், தன்னுடைய பக்கத்து நாடுகளில் எல்லாம் ஒரு அவசரப் பயணம் சென்று பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை முடிவு செய்கிறார். இதன் மூலம் அமெரிக்க ஏற்றுமதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களுடைய நாட்டு பொருட்களை ஆசியா கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனாவின் வர்த்தகத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இந்தியா மிகப்பெரிய உள்நாட்டு வர்த்தகத்தைக் கொண்டிருந்தாலும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இருப்பதாக கருதுகிறார்கள் அந்த பொருளாதார நிபுணர்கள். காரணம் இந்தியாவில் உற்பத்தி செலவு குறைவு, ஆற்றல்மிகு இளைஞர்கள் படையும் அதிகம். இப்போது இருக்கிற கட்டமைப்பு வசதி மற்றும் என்ன பிற வசதிகளையும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றினால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரிய பலன் அடைவது உறுதி என்றும் நம்புகிறார்கள்.

 பன்னெடுங்காலமாகவே இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிற தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணத் துறையிலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையிலும், மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மருந்துப் பொருட்கள் சம்பந்தமான ஒரே ஒரு தொழிலில் மட்டும் இந்தியா சீனாவை விட முன்னோக்கி இருக்கிறது. இருந்தாலும் இதற்குத் தேவையான மூலப்பொருட்களைக் கூட நாம் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம் தற்பொழுது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்கள்.

சூரிய ஒளி மின்சக்தியை உருவாக்கும் சூரிய ஒளி தகடுகள் இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி ஆன போதிலும் அதன் மூலப்பொருள் உற்பத்தியில் உலகத்தில் சீனா தான் முதலிடம் வகிக்கிறது. அங்கிருந்துதான் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும்.

அதேபோல கையடக்கத் தொலைபேசி உற்பத்திக்கும் மூலப்பொருள்கள் சீனாவில் இருந்துதான் பெற வேண்டும்.

மேலும் தற்போதைய அரசாங்க சட்ட திட்டங்களும், சிவப்பு நாடா முறைகளும், ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கின்றன என்பதையும் மறக்காமல் அவர்கள் குறிப்பிட்டு, இந்த நிலைமை மாறினாலொழிய இந்த பொன்னான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்வது எளிதானது அல்ல என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள்.

2014 காலகட்டத்தில் இந்தியாவிலேயே பொருட்களைத் தயாரிப்போம் என்கிற "மேக் இன் இந்தியா" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அதை மிகச் சரியாக முன்னெடுத்துச் செல்லாததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்கிற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதன் காரணம் என்ன என்பதையும் அரசு அறிந்து அதை நிவர்த்தி செய்யாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது மிகவும் சிரமமாகத்தான் இருக்கும்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டைப் போன்று சிறப்பாக முன்னேற்றப் பாதையில் தமிழ்நாட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற தன்முனைப்போடு செயல்படுகிற அரசும், அரசு அதிகாரிகளும், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உருவாக வேண்டும்.

அப்படி செய்வதன் மூலமே இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடாமல் பயன்படுத்த முடியும். அரசும் அரசு அதிகாரிகளும் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். செய்வார்கள் என்று நம்புவோமாக!