சிறு மயில்

7 February 2026

Next →

பூ போட்ட தாவணி..

பூ போட்ட தாவணி

"அம்மா... அம்மா... காது கேட்கலையா அம்மா?" — முத்தமிழ் செல்வியின் குரல், அதிக சூடாகிப்போன தோசைக்கல்லில் வார்த்த தோசை கல்லோடு ஒட்டிக்கொண்டதில், கண்ணம்மாவிற்கும் தோசைக்குமான சண்டைக்கு நடுவில் சரியாகக் கேட்கவில்லை. "அதுக்கென்ன, காது நல்லாத்தான் கேட்குது, சொல்லு" என்றவாறு தன் தோசைச் சண்டையைத் தொடர்ந்தாள் கண்ணம்மாள். "நாளைக்குத் தலைக்குச் சிக்கு எடுத்துச் சீவி விடுறேன். இன்னைக்குச் சீக்கிரமா குளிச்சிட்டு ஏதாச்சும் ஒரு டிரஸ் போட்டுட்டு வந்து சாப்பிடு, தோசை ஆறிப்போகிறது" என்றாள்.

குளித்துத் துணி மாற்றிவிட்டு வந்த செல்வி, கையில் ஒரு பிரிண்ட் அடித்த பட்டுத் துணியையும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள். "இதை எதற்கு எடுத்துட்டு வந்த? அதைப் போடுற வயசும் நாளும் உனக்குச் சீக்கிரம் வரும் என்றுதான் நான் வாங்கி வைத்திருக்கிறேன்" என்று சொல்லி, அந்த பூப்போட்ட  பிரிண்டட் பட்டுத் தாவணியை  அவளிடமிருந்து திரும்ப வாங்கி எடுத்துக்கொண்டு போய்ப் பத்திரப்படுத்தினாள் கண்ணம்மாள். "அந்த நாள் வருமா? எப்போ? ஏன் அப்படி என்ன முக்கியம் அந்த நாளுக்கு?" என்று தனக்குள் கேட்டுக்கொண்டே தோசையை உண்டு முடித்தாள் முத்தமிழ் செல்வி.

வழக்கமாகவே பள்ளி முடித்தபின் வீடு திரும்பும் முத்தமிழ் செல்வி, பள்ளிக்கூடப் புத்தகப் பையைச் சோபாவின் மீது வீசி எறிந்துவிட்டு உடனடியாக விளையாடச் செல்வது வழக்கம். அவள் ஆட்டத்தையும் பாட்டத்தையும் வீட்டில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது அவளுக்கு ஒரு கூடுதல் சௌகரியம். அவள் சற்று வாய் துடுக்குக்காரி. ஆனால் இன்று அவ்வாறு இல்லை. வீடு திரும்பிய முத்தமிழ் செல்வி சற்றுச் சோர்ந்தவாறு காணப்பட்டாள். என்னவென்று தெரியாமலும், அதை எப்படி யாரிடம் சொல்வது என்று புரியாமலும் தன் அறைக்குள் புகுந்து குறுகிப் படுத்துக்கொண்டாள்.

அவள் முனகல் சத்தம் கேட்டு அவளின் தந்தை வழிப் பாட்டி ராசாத்தி, முத்தமிழ் செல்வியின் படுக்கை அறைக்கு வந்தாள். அப்போது அவளது தந்தை குமாரசாமியும் வேட்டியின் தலைப்பைக் கையில் பிடித்தவாறு உள்ளே நுழைந்து, "என்ன கண்ணு? என்ன ஆச்சு? ஏன் பள்ளிக்கூடத்துல யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? காய்ச்சலா? டீச்சர் ஒன்றும் சொல்லலையே? காய்ச்சல் கீச்சல் ஒன்றும் இல்லையே? சரி, ஏதாச்சு பாட்டி சொல்ற மருந்து சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு" என்று கூறிவிட்டுத் தோட்டத்திற்குக் கிளம்பிச் சென்றார்.

உள்ளே வந்த பாட்டி, முத்தமிழ் செல்வியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து, "காய்ச்சல் ஒன்றும் இல்லையே, என்ன பண்ணுது கண்ணு சொல்லு?" என்றாள். "பாட்டி, எனக்குப் பயமா இருக்குது, என்னமோ பண்ணுது, என்னன்னு தெரியல. அம்மாகிட்ட சொன்னா அம்மா சத்தம் போடும்" என்றாள் செல்வி. "அப்படியா சரி, என்கிட்ட சொல்லு" என்ற பாட்டியிடம், "வயிறு வலிக்குது பாட்டி, பாத்ரூம் போனா ஒரு சொட்டு ரத்தம் வந்தது. எனக்கு ஒரே பயமா இருக்குது பாட்டி" என்று நடுங்கியவாறே சொன்னாள் முத்தமிழ் செல்வி.

 

 

இதைக் கேட்டதும் அந்தப் பல தலைமுறை கண்ட கிழவி துள்ளிக் குதித்தாள். "அப்படிப் போடு! வெள்ளிக்கிழமை அதுவுமாச் சமஞ்சிருக்க மகாலட்சுமியே வந்துட்டா போ இந்த வீட்டுக்கு!" என்றவாறே பேத்தியை வாஞ்சையோடு அள்ளி எடுத்து முத்த மழை பொழிந்தாள். செல்விக்கு ஒன்றும் புரியவில்லை. "கண்ணம்மா, புள்ள வயசுக்கு வந்துட்டாடியோ! குமாரசாமிக்குத் தோட்டத்துக்குப் போக வேண்டாம்னு சொல்லி வீட்டுக்கு வரச் சொல்லு. அப்படியே அந்த காலண்டரை எடுத்துப் பாரு. ஆறுக்குட்டியை கூப்பிட்டுச் சமாச்சாரத்தைச் சொல்லி வரச் சொல்லு" என்றாள் பாட்டி. பாட்டிக்கு இப்போது பத்து வயது குறைந்தது போலிருந்தது; கண்ணம்மாவிற்கோ கவலை அதிகரித்தது.

வீட்டிற்குள் சத்தமில்லாமல் சில நிகழ்ச்சிகள் அரங்கேறின. கண்ணம்மாள் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதற்குத் தயாராக அடுப்படிக்கு விரைந்தாள். தந்தை குமாரசாமியும் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன்  ஐயர் வீட்டுப் லட்டு  பொட்டலத்துடன் வீட்டுக்குள்ளே வந்தார். ஆறுக்குட்டி என்கிற குட்டி மாமன், தன் மனைவியிடம் விஷயத்தைப் பகிர்ந்துகொண்டு குடும்ப ஜோசியரைத் கலந்தாலோசிக்கப் புறப்பட்டான்.

“”அவர்கள் வீட்டுத் தோட்டத்தின் ஒற்றை ரோஜா பூக்க ஆரம்பித்தது””.

இந்தச் சப்தங்களுக்கு நடுவிலும், வீட்டிற்குள் இருந்தபடியே காதுகளைத் தெருவீதி உலா விட்டிருந்த கதீஜா பீவிக்கும் செய்தி எட்டியது. தன் மகள் ஜக்கியா பானுவை அழைத்து, "உன் தோழி முத்தமிழ் செல்வி பெரியவள் ஆகிவிட்டாள், உடனடியாக அவர்கள் வீடு சென்று அவளுக்கு உறுதுணையாக இரு, நான் பின்னால் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, அவரே தன் கணவனுக்குச் செய்தியைச் சொல்ல போனை கையில் எடுத்தார். "இப்ப எல்லாம் பொண்ணுங்க வயசுக்கு வருவதற்கு ரொம்ப நாள் காத்திருப்பது இல்லை, சீக்கிரமே வந்துவிடுகிறார்கள். எங்கள் காலம் போலும் இல்லை, அறிகுறி கூடத் தெரிவதில்லை. இந்த ஃபாஸ்ட் ஃபுட், தூக்கம் கெடுவது, உடல் பயிற்சி இல்லாதது இதனால்தான் 12 வயதிலேயே வயசுக்கு வந்துட்டாங்க" என்று சொல்லித் தன்னுடைய குறைந்தபட்ச அறிவை நிரூபித்துக்கொண்டாள் கதீஜா பீவி.

பத்து நிமிடம் கழிந்தது. செல்வியின் காதுகளில் மட்டுமே கேட்கும்படி  "இங்கே பாரு , பயப்படாதே. இது ஒன்னும் வியாதி இல்லை. ஒரு செடி மொட்டு விட்டுச்சுன்னா அடுத்த நாள் பூக்குதுல்ல, அந்த மாதிரிதான். இப்போ நீ வந்து பொம்பள புள்ளையா மாறிட்ட. இனிமேலும் சின்ன புள்ள இல்ல. இது உனக்குக் கிடைச்சிருக்கிற சமூக அந்தஸ்து. இது இனிமேல் மாசமாசம் நடக்கும். அதனால சோர்ந்து போயிடாத, பயந்து போயிடாத".

"நான் உனக்கு இரும்புச்சத்து அதிகமா இருக்கிற கருப்பு உளுந்து களி, வெல்லம் போட்ட கடலை மிட்டாய், பேரிச்சம்பழம் இதெல்லாம் கொண்டு தாரேன். தினமும் சாப்பிடு. உங்க அப்பன்கிட்ட சொல்லி இதை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைக்கச் சொல்றேன்.  முக்கியமா, நல்லெண்ணெய் ஒரு துளி சாப்பிடு, அது இடுப்பு எலும்புக்கு ரொம்ப நல்லது. அப்பத்தான் நாலு புள்ள பெத்துக்க முடியும் என்ற மாதிரி. நான் சொல்றத கவனமா கேளு தங்கம். இதுல கூச்சப்படுறதுக்கும் பயப்படுறதுக்கும் ஒண்ணுமே இல்லை" என்று பாட்டி அறிவுரை கூறினாள்.

 

 

செல்விக்கு இப்போது ஏதோ கொஞ்சம் புலப்பட்டது. தன் உடல் மாற்றம் இந்த வீட்டில் ஏதோ ஒரு மகிழ்ச்சியை வரவழைத்திருக்கிறது. தோட்டத்திலிருந்த ரோஜா இவர்களின் காதில் ஏதோ ஒன்றைச் சொல்லியிருக்கிறது; அதன் நறுமணம் அருகில் உள்ள வீடுகளுக்கும் இப்போது சென்றுவிட்டது.

செய்தி கேட்டு ஓடி வந்தாள் தோழி ஆயிஷா. வந்தவள் செல்வியின் வாயில் ஒரு சாக்லேட்டைத் திணித்து, "என்னடி பெரிய மனுஷி ஆயிட்டியாமே! இனிமேல் கடலை போடுவதற்கு வேற ஆள் கிடைத்துவிடும், என்னை மறந்துடாதடி" என்று கிண்டலாகச் சொல்லித் தொடையைக் கிள்ளினாள்.

"ஒன்னும் பயப்படாதே, எனக்கு முதல்ல வந்தப்பக் கூட ஏதோ அடிப்பட்டுச்சுன்னு நினைச்சு அழுதுட்டேன். அப்புறம் எங்க அம்மா சொன்னாங்க இது நார்மல் அப்படின்னு. இனிமேல் நம்ம ஜாக்கிரதையா இருக்க வேண்டும். ஸ்கூலுக்குப் போகும்போது ஒரு பேட் எக்ஸ்ட்ரா வச்சுக்கணும். அடிக்கடி பாத்ரூம் போய் செக் பண்ணிக்கணும். மற்றபடி இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. இந்த இஷ்யூ ரெண்டு நாள்ல சரியாயிடும். அதுக்கப்புறம் நம்ம வாலிபால் விளையாடப் போகலாம். எங்க வாப்பா கூடச் சொன்னாங்க, இதுக்கும் நம்ம ஸ்போர்ட்ஸ்க்கும் எந்தவிதத் தடையும் இல்லை என்று"  தேற்றினாள் ஆயிஷா.

குடும்பத்தின் ஆணிவேரும் இரண்டு விழுதுகளும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, கண்ணம்மா வந்து சேர்ந்தாள். அவளுக்கு அறிவுரை சொல்ல… ஒரு தாய் இந்த விஷயத்தைப் பார்ப்பது, பாட்டியின் பார்வையை விடக் கொஞ்சம் பொறுப்புணர்வும் அக்கறையும் சிறு பதற்றமும் கலந்ததாக இருக்கும். பாட்டி பாரம்பரியத்தைச் சொன்னால், தாய் அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைப் பற்றியும் பாதுகாப்பைப் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பாள். தான் ஈன்றெடுத்த மகள் பெண்ணாக மாறும் அந்தத் தருணம், அவளுக்கு இவ்வுலகில் கிடைக்கும் ஆகப்பெரிய இரண்டாம் பரிசு. முதல் பரிசு குழந்தையைப் பெற்றெடுத்தது, அதுவும் மகளைப் பெற்றெடுத்தது; இரண்டாம் பரிசு அவள் பூப்பெய்தது.

கண்ணம்மாள் படித்தவர் என்பதால், இதை எப்படி மருத்துவ ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அணுகுவது என்பதில் தேர்ச்சி பெற்றவர். நாப்கின் பயன்பாடு பற்றியும், சுத்தம் பற்றியும், உடலில் இதன் பின்னர் ஏற்படப்போகிற மாற்றங்கள் — மார்பக வளர்ச்சி, முடி வளர்ச்சி, முகப்பருக்கள், குரல் மாற்றம் — இவை பற்றி எல்லாம் மிகவும் தெளிவாகத் தன் மகளுக்கு எடுத்துரைத்தாள்.

வீட்டு வாசலில் புல்லட் சத்தம் கேட்கவும், அதிலிருந்து அவசரமாக ஓடி வந்த குட்டி மாமன், வாசல் படியை கூட மிதிக்காமல் தாண்டி ஓடிவந்து, தன்னுடைய அக்கா கண்ணம்மாளைக் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டான். "ஜோசியக்காரனைப் பார்த்துட்டேன், நல்ல நேரம்தான் சொல்லிட்டான். சீர் எப்ப வச்சுக்கலாம் அப்படிங்கிற நாலு அஞ்சு தேதியும் கேட்டுட்டு வந்து இருக்கிறேன். மச்சான் சௌகரியம் எல்லாம் கேட்டுட்டு ஒரு நல்ல நாள் பார்த்து உடனே செஞ்சுட்டோம்னா, அவளுக்கும் பரீட்சை வருது, பள்ளிக்கூடம் போறதுக்குச் சௌகரியமா இருக்கும்" என்று சொல்லியவாறு சோபாவில் அமர்ந்தான். அவன் பின்னால் வந்த அவனின் மனைவி, செல்வியின் அத்தை ரோகினி, முத்தமிழ் செல்வியின் அறைக்குள் சென்று அவளை ஆசீர்வதித்து, நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்து, கையோடு கொண்டு வந்த மல்லிகைப் பூவையும் சூட்டி மகிழ்ந்தாள்.

 

செல்வி, கண்ணு,  வந்து மாமா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோமா என்றவாறே ரோகினி வெளியே வந்து, தன கணவரிடம், சரி ஆக வேண்டிய வேலையைப்பாருங்க.அந்த கீத்து எல்லாம் எடுத்து போட்டு குடிசை கட்ட வேண்டிய வேலைய பாருங்க என்றாள்.

கொங்கு மண்டலத்தின் கலாச்சாரத்தில் 'மாமன் குடிசை கட்டும் சடங்கு' என்பது மிக முக்கியமான நிகழ்வு. ஒரு பெண் பூப்படைந்தவுடன் அவளது தாய் மாமன் தன் கையால் தென்னங்கீற்றுகளால் ஒரு குடில் அமைப்பது இந்தச் சடங்கின் மையம். இது ஒரு சடங்காக மட்டும் பார்க்கப்படுவதில்லை; அந்த வீட்டுப் பெண் திருமண வயதை எட்டிவிட்டாள் என்பதை உலகிற்குத் தெரிவிக்கும் குறியீடு. இந்த ஓலைக்குடிசை கட்டும் பொறுப்பு தாய் மாமனுக்கு மட்டுமே உண்டு. அவன் அவளைப் பிற்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் உரிமையையும் பெற்றவன் ஆகிறான். ஆதலால் அந்தப் பெண்ணிற்கு இனிமேல் வரும் பிரச்சனைகளை இன்று முதல் தானே சுமக்க இருக்கிறேன் என்பதை அறிவிக்கும் குடிசையாகவும் அது இருக்கும்.

இந்தக் குடிசை கட்டுதலும், அந்தப் பெண்ணைச் சில தினங்கள் தனிமைப்படுத்துதலும் மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான ஒரு நிகழ்வு. அந்த நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஓய்வும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பும் தேவை. பச்சை தென்னை ஓலைகளால் ஆன இந்தக் குடிசை இயற்கையான குளிர்ச்சியைத் தரும், அந்தத் தனிமை மன அழுத்தத்தைக் குறைக்கும். பூப்படைந்த ஒன்பதாவது நாள் அல்லது 11-வது நாளில் அந்தப் பெண்ணுக்கு 'மஞ்சள் நீராட்டு விழா' நடக்கும். இந்த விழா அன்றுதான் மாமன் கட்டிய ஓலைக்குடிசை அகற்றப்படும். அந்தப் பெண்ணுக்குப் புனித நீர், வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்பட்டு மஞ்சள் நீர்க் குளியல் செய்யப்படும்.

அத்தையும் தன் பங்கிற்குச் சில விஷயங்களைச் சொல்ல, இப்பொழுது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை — ஆனால் எல்லோருக்கும் எல்லாம் புரிந்துவிட்டது

அம்மாவின் பூப்போட்ட தாவணியை எடுத்துத் தன்மேல் போர்த்திக்கொண்டு நடுவாசலுக்கு வந்தாள். வந்தவள் மாமனின் காலில் விழுந்து வணங்கினாள். அந்த பூப்போட்ட தாவணிக்குள், ஒரு குழந்தை மறைந்து — ஒரு பெண் மலர்ந்து நின்றாள்.

யுவராஜ் சம்பத்..07.02.2026