28 July 2026
Next →அம்மா..
அம்மா அடிக்கடி ஏதாவது குறுஞ்செய்திகளைஅனுப்புவாள். முதலில் படிக்கும் பொழுது ஏதாவது தோன்றினாலும் பின்னர் சில நாட்கள் கழித்து அதன் பொருள் விளங்கிவிடும், தானாகவே. இது எனக்கும் அம்மாவுக்குமான உறவை பல நேரங்களில் சிதைக்க முயற்சித்தாலும் பின்னர் உட்கார்ந்து யோசிக்கும் போது அம்மா சொன்னது சரி என்பது புரியும் அம்மாவின் மீதுள்ள அன்பும் காதலும் அதிகமாகிவிடும்.
நேற்றும் அம்மா அப்படித்தான் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தாள்.
“யாருக்கும் கேட்டு விடக் கூடாது என்று மெல்லிய குரலில் காதில் சொல்லும் வார்த்தைகள் யாராவது மூன்றாவது மனிதனுக்கும் கேட்டு விடுகிறது எப்படியோ.”
படிக்கும்போது பொருள் புரியவில்லை என்றாலும் அதில் ஏதோ ஒரு பொருள் உள்ளீடாய், குறியீடாய் இருக்கிறது என்பது மட்டும் புலப்பட்டது.
------------------------
இன்று அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை. வார இறுதி நாள் வேலை பளுவுக்கு இடையில் தலைக்கு குளிக்க வேண்டி இருப்பதால் எனக்கும் அருணுக்கும் காபியை மட்டும் தயார் செய்து எடுத்து எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் ஒரு கோப்பை கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தேன் காபியுடன். எப்படியும் காபி சாப்பிட்டு முடிவதற்குள் இந்த குறுஞ்செய்தி விளங்கிவிடும் என்று நம்பி. காபியின் மணத்துடன்” அம்மாவின் வாசனையையும் சேர்த்து நுகர்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். உண்மையில் புரியவில்லை.
25 வருட அமெரிக்க வாழ்வு என் தமிழுக்கும் கொஞ்சம் தடை போட்டது என்பது உண்மைதான் வேறு வழி இல்லை ஏதோ அம்மாவிடமும் மற்ற உறவுகளிடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் தமிழ் பேசுகிறேன். மற்றபடி வீட்டு வேலைக்காரி ஸ்பானிஷ், டல்லாஸ் நகர தெருக்களில் ஆங்கிலமும் ஹிந்தியும், மலையாளமும், தெலுங்கு அந்த அளவு தமிழ் இல்லை. வருத்தம்தான் என்ன செய்ய?
அலுவலகம் செல்லும் பொழுது யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். காரணம் இங்கு அலுவலகம் செல்லும் சாலையில், டெக்ஸஸ் மக்கள் இந்த மாதிரி போக்குவரத்து நெருக்கடிகளில் சிக்குகிற பொழுது , ஒன்று யோசிப்பார்கள் அல்லது பேசிக்கொண்டே இருப்பார்கள் டெக்ஸாஸுக்கு உரித்தான கடுமையான அர்த்தம் கொண்ட ஆனால் கிண்டலான சொல் வழக்கில் திட்டுவதும் வழக்கம். இதை அமெரிக்காவின் வடபகுதியில் வாழ்கிறவர் கிண்டலாக கூட பேசுவார். சில நேரங்களில் தெற்கத்தியான் என்று வட அமெரிக்கர்கள் சொல்வது பொருத்தம் தானோ என்று நம்மையே யோசிக்க வைக்கும். மிகப்பெரும் பணக்காரர்கள், “ரொல்ஸ் ராய்ஸ்”ஓட்டுபவர்கள் கூட ஏடாகூடமாக ஓட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அப்படி ஒரு நேரத்தில் அம்மாவின் குறுஞ்செய்தியை யோசித்துப் பார்க்க முடிவு செய்து அலுவலகம் செல்ல தயாரானேன்.
இப்படித்தான் சென்ற முறை எனக்கும் அருணுக்கும் ஏற்பட்ட ஒரு சிறிய மனக்கசப்பை அம்மாவிடம் சொல்லி புலம்பி அழுத போது அவள் என்னை தேற்றினாள். அதன் பின்னர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது.
“கண்ணீரைத் துடைக்க எத்தனை ஆயிரம் கைகள் அருகில் இருந்தாலும் அந்த கண்ணீரை வர விடாமல் தடுக்கும் சக்தி தகுதி ஏதோ ஒரு கைக்குள் தான் இருக்கிறது. அந்த கையை தேடி அடைந்து விட்டால் நீங்கள் பேரன்பை பெற்றவர் ஆவீர்கள்”..
அந்தக்கை அருணுடைய கைகள் தான் என்பது பினர்தான் எனக்குப் புரிந்தது. அதைப்போலவே இந்த செய்திக்கும் என்ன அர்த்தம் என்பதை விளங்காமலேயே அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
அம்மா எப்படி தமிழில் டெக்ஸ்ட் அடிக்கிறாள் என்பதை பற்றி அருணிடம் விசாரித்த போது அருண் சொன்ன செய்தி சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அம்மா இப்பொழுதெல்லாம் ஆண்ட்ராய்டு போனில் “வாய்ஸ் டைப்பிங்” செய்கிறாள். ஐபோனில் இல்லாத ஒரு வசதிய ஆண்ட்ராய்டு போனில் உள்ளது. ஐபோன் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான், தயாராகிறது என்பது வருத்தத்திற்குரிய கூடுதல் செய்தி,
===========
கணவன் மனைவி சண்டை வருவது எந்த ஊரிலும் எல்லா குடும்பங்களிலும் நடப்பது தான். கிறிஸ்துமஸ் விடுமுறையின் ஒரு வார இறுதி நாளில் எந்த உணவகத்திற்கு செல்லலாம் என்று எனக்கும் அருணுக்கும் ஒரு சிறிய விவாதம் வந்தது. குப்பண்ணா உணவகத்திற்கு செல்லலாமா அல்லது மதுரை மெஸ்சுக்கு செல்லலாமா என்பது பற்றி. ஏதோ மதுரையில் கிடைக்கும் ஐறை மீன் குழம்பை அப்படியே டெல்லாஸ் ரெஸ்ட்ரான்டில் தருகிறார்கள் என்று நினைப்பு அருணுக்கு. அருணின் எண்ணம் ஈரோடு குப்பண்ணா டேஸ்ட் டல்லாஸில் இருக்காது என்பது. இருந்தாலும் ஒரு பெண் தானே! சொந்த ஊரை விட்டுக் கொடுக்க முடியுமா என்று நான் சொல்ல, மதுரை மெஸ் தான் என்று அவர் சொல்ல இடையில் புகுந்த ஜக்கி ( ஜெகதீஸ்வரன் என்கிற பூர்வாஸ்ரமப் பெயர் அமெரிக்க பள்ளிகளில் ஜக்கி என்று சுருக்கப்பட்டது. பாவம் அவன் என்ன செய்வான்) இரண்டு பேருக்கும் வேண்டாம் டாஸ் போட்டு பார்ப்போம் என்று சொல்ல, அதிர்ஷ்டத்தில் சிறிதும் நம்பிக்கை அற்றவளான எனக்கு “அது பிடிக்கல வேண்டாம்” என்று சொல்லி உன்னுடைய சாய்ஸ் என்று பதில் சொல்ல அது மெக்சிகன் கிரில்லில் முடிந்தது.
இதை அம்மாவிடம் சொன்னபோது அம்மாவின் text இப்படி இருந்தது.
"Winds do not blow as the vessels wish”.This famous Arabic proverb,
"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எது இல்லை”.
இதெல்லாம் புரிந்த அளவு இன்றைய குறுந்செய்தி இன்னும் புரிபடவில்லை .
==============================
வாரத்தின் கடைசி நாள் wrap up மற்றும் நேற்றிரவு இந்தியாவிலிருந்து on call... இரண்டும் சேர்ந்து அலுவலக வேலை அதிகமாக்கியதால் அம்மாவின் டெக்ஸ்ட பற்றி அதிகமாக யோசிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் அம்மா அதிகமாக பூடகமாக பேசுகிறாள் .. சென்ற வாரம் கூட என் அலுவலகத்தில் ஒரு தோழியுடன் இரவு இரவு விருந்துக்கு சென்றதைப் பற்றி சொன்னபோது அம்மா சொன்னால் ஆமாம் புளி இல்லாத குழம்பும் உப்புல்லாத ஊறுகாயும் ருசிக்காது அதனால இந்த மாதிரி தோழிகளுடன் அடிக்கடி வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னாள். மதிய உணவு இடைவேளையில் போனைப் பார்த்தபோது, அம்மாவிடமிருந்து இன்னுமொரு மெசேஜ் வந்திருந்தது. அது என் இதயத்தை ஏதோ செய்தது:
"பேசுவதற்கு பல நூறு வார்த்தைகள் உள்ளன அவளிடம். ஆனால் காது கொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை."
இதைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கின. இது யாரைப் பற்றியது? என்னைப் பற்றியதா அல்லது அம்மாவைப் பற்றியதா? அமெரிக்காவின் இந்த இயந்திர கதியில் நான் யாரிடமாவது பேசத் துடிக்கிறேன் என்பதை அம்மா உணர்ந்துவிட்டாளா? அல்லது ஊரில் தனியாக இருக்கும் அம்மா, தன்னிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தும் கேட்பதற்கு நான் அருகில் இல்லையே என்று வருந்துகிறாளா?
===================
இவ்வளவு கதையையும் உங்களுக்கு சொன்ன நான் யார் என்று உங்களுக்கு சொல்ல மறந்து விட்டேனே நான்தான் சித்ராங்கி அருண் மஹாதேவன். சித் என்று அமெரிக்கர்களால் சுருக்கப்பட்ட பெயரைக் கொண்ட, இரண்டாவது குழந்தைக்கு தாயகப்போகிறேன் என்பதை, அம்மாவிடம் சொல்ல, மற்றொரு டெஸ்ட் ரிசல்ட்டை எதிர்பார்க்கும், 25 ஆண்டுகளாக டல்லாஸில் வசிக்கும் கொங்கு குமரி...அவ்வளவு போதும் இப்போதைக்கு ...
அம்மா நேராகக் கேட்கவில்லை.
ஆனால் உடலின் மொழி, குரலின் மாற்றம், வார்த்தைகளின் இடைவெளி அவற்றை அம்மா கேட்டு விட்டாள்.
அதுதான் அந்த குறுஞ்செய்தி:
“யாருக்கும் கேட்டு விடக் கூடாது என்று மெல்லிய குரலில் காதில் சொல்லும் வார்த்தைகள்
யாராவது மூன்றாவது மனிதனுக்கும் கேட்டு விடுகிறது எப்படியோ.”
“மூன்றாவது மனிதன்” என்பது வெளி உலகமல்ல.
அம்மாவின் உள்ளுணர்வு.
ஒரு பெண் கருவுற்றால்,அவள் தாய்க்கு தெரியாமல் இருக்க முடியாது
அது உடலறிவா?
இனச்சார்ந்த நினைவா?
அன்பின் அதிர்வா?
அல்லது
தாயின் கருப்பை நினைவுகளா ?.
=============
----யுவராஜ் சம்பத்..