22 August 2026
சிங்கப்பூர் சிங்காரி...
சிங்கப்பூர் சிங்காரி...
ரமேஷின் பாஸ்போர்ட்டில் Departed - Madras Airport, 25-Aug-1982 என்ற முத்திரையுடன், Immigration Check Not Required என்ற சீலும் குத்தப்பட்டது. ரமேஷ் முதல்முறையாக வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்குப் புறப்பட்டான். மலேசியாவிற்கு வேலைக்குச் செல்வதால், ஊரே திரண்டு வந்து விமான நிலையத்தில் அவனை வழி அனுப்பி வைத்தது. ஒரு குக்கிராமத்திலிருந்து வெளிநாடு கிளம்பும் பையனைக் கட்டிப்பிடித்தலும், அவனுக்காகக் கண்ணீர் விடுதலும் புதுமையாகத் தோன்றவில்லை. வழியனுப்பும் காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன நாற்பது வருடங்களுக்குப் பிறகும்.
===
ஊரெங்கும் இதே பேச்சுதான்.கேட் தோட்டத்து வீட்டுக்காரருக்கு மலேசியாவிலிருந்து ஏதோ ஒரு பொண்ணு விருந்தாளியா வந்திருக்குதாமே! யாரது?"
"அந்தப் பொண்ணு பேண்ட்-சர்ட் போட்டு, தலையில மல்லிகைப் பூவும் வெச்சிருக்குது. இது என்ன நம்ம ஊரு பொண்ணாத் தெரியலையே!" எனப் பெண்களும் தங்கள் பங்குக்கு இதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள்.
விடலைப் பையன்களுக்கு இது ஒரு காட்சிப் பொருளாக மாறியது. அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஒரு பெயரையும் வைத்தார்கள்: 'சிங்கப்பூர் சிங்காரி!'
அந்தக் காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட, கமலஹாசனும் ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்த திரைப்படப் பாடலின் வரிகள் அது. ரமேஷ் தன் பங்கிற்கு என்ன விளக்கம் சொல்லியும், ஊர் அந்தப் பெண்ணைத் தமிழ்ப் பெண்ணாக ஏற்க மறுத்தது.
அந்தப் பெண் பேசிய தமிழ் தமிழ்நாட்டு தமிழை போல இல்லாததும் அதற்கு ஒரு காரணம். அவள் வீட்டிற்கு வந்த ஆண்களை 'கவான்' என்று அழைத்தாள்."காப்பி சுசு வேண்டும்" என்றாள்.வீட்டிற்கு வந்தவர்கள் திரும்பிச் செல்லும்போது, "சரிங்கண்ணே, போயிட்டு வாங்க... சலாமத் ஜாலான்!" என்று சொன்னாள்.
'கவான்' என்பது நண்பன் என்பதையும், 'காப்பி சுசு' என்பது அவர்கள் ஊரில் குடிக்கும் கறுப்புக் காப்பி அல்ல, பால் சேர்த்த நம் ஊர் காப்பி என்பதையும், 'சலாமத் ஜாலான்' என்பது 'போயிட்டு வாங்க' என்பதையும் குறிக்கும் மலாய் சொற்கள் என்பதை ரமேஷ் எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பான்?
ஆகவே, அவர்களுக்கு அவள் 'சிங்கப்பூர் சிங்காரி'தான்!
அந்தப் பெண்ணின் பெயர் சாந்தி கே. சாமிநாதன். இதுவும் ஒரு பேசுப்பொருளாயிற்று.
"என்னப்பா இது, இந்த பொண்ணு பேரு இவ்வளவு பெருசா இருக்குது?"
"இல்லை... அந்த ஊர்ல எல்லாம் இப்படித்தான் மூன்று பெயர்களை எழுதுவாங்க," ரமேஷ்தான் பதிலளித்தான்.
"அவங்க அப்பா பேரு, ஜாதி பேரு எல்லாம் கூட அங்க வரும். நம்ம ஊர்ல கூட அப்படி இருந்ததுதானே... சந்திரிகா ஜீ.கே. நாயர், சீனிவாசன் ஐயங்கார்ங்கிற மாதிரி. தமிழ்நாட்டில்தான் தந்தை பெரியார் தோன்றியதற்குப் பின், இந்தச் சாதிப் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக்கொள்ளும் பழக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டது. அதனால உங்களுக்கு இது புதுமையாத் தெரியுது," என்று சமாளித்தான் ரமேஷ். இருந்தாலும், 'சிங்கப்பூர் சிங்காரி' என்கிற பெயர் மட்டும் அவளுக்கு ஒட்டிக்கொண்டது.
ரமேஷின் குடும்பம் அந்த கிராமத்தில் பெரிய நிலக்கிழார் குடும்பமாக இருந்தது. அவர்கள் தலைமுறையில் ரமேஷின் தாய்மாமன் மட்டுமே பள்ளிக் கல்வியை முடித்தவர். ரமேஷின் அப்பாவோ சித்தப்பாவோ படித்ததில்லை. இருந்தாலும் 120 ஏக்கர் நிலம் இருந்தது. அதனால் இயல்பாகவே ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகவும் அவனுடைய மாமாவே இருந்து வந்தார். தான் படிக்கவில்லையே தவிர, தன் குடும்பத்தில் யாராவது படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு, ரமேஷ் அட்சய பாத்திரம் போல் கிடைத்தான். அவனுடைய படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டு அவனை மிகப்பெரிய படிப்பான பி.ஏ. படிக்க வைத்தார், சென்னையில். வேறு எந்த எதிர்பார்ப்பும் அப்பொழுது அவருக்கு இல்லை. பி.ஏ. படித்த ரமேஷ், மலேசியாவிற்கு ரப்பர் தோட்டத்தில் மேலாளராக வேலை செய்யச் சென்றான்.
==
வேலைக்குச் சென்ற இடத்தில், ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் மகளான சாந்தி அறிமுகமானாள். நட்பு தொடர்ந்தது. ரமேஷின் வெள்ளந்தியான பேச்சும் நேர்மையும் சாந்திக்குப் பிடித்திருந்தது. ரமேஷுக்கும் அவன் வாழ்வில் சந்தித்த முதல் அன்னியப் பெண் என்பதால், அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பைக் காதல் என்றும் சொல்ல முடியாது, வெறும் நட்பு என்றும் சொல்ல முடியாது; இனம் புரியாத பருவக் கோளாறில் வந்த ஒரு ஈர்ப்பு அது.
இவர்களின் தொடர்ந்த உரையாடல்கள் மூலம், மலேசியாவும் சிங்கப்பூரும் ஒரு காலத்தில் ஒன்றாகவே இருந்தன என்றும், 1965-இல் அவை தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன என்றும் ரமேஷ் தெரிந்துகொண்டான். மலேசியாவில் தமிழர்கள் பெரும்பாலும் இரண்டாம் / மூன்றாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்றும், ஆனால் அதற்கு நேர்மாறாகச் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றும் சாந்தி விளக்கியபோது அவன் வியந்தான். அதனால், மலேசியத் தமிழர்களுக்குச் சிங்கப்பூரில் வாழ்வது பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது.
அதே நேரத்தில், பிரிவுக்குப் பின்னரும்கூட இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தகத்தில் இணைந்து செயல்பட்டன என்பதையும் அவன் அறிந்துகொண்டான். மலேசியாவிற்குச் சிங்கப்பூர் மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாகவும், சிங்கப்பூருக்கு மலேசியா முதன்மையான வர்த்தகக் கூட்டாளியாகவும் விளங்கியது. குறிப்பாக, எண்பதுகளில் சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை மலேசியா எவ்வாறு பூர்த்தி செய்தது என்பதையும், அதற்குப் பதிலாக மலேசியாவின் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு சிங்கப்பூர் உதவி செய்தது போன்ற இருதரப்பு நட்புச் சூழலையும் சாந்தி அவனுக்குப் புரியவைத்தாள்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்களின் வழியே, 'கடை' என்பதைக் குறிக்கும் கடாய் (Kedai), 'சந்தை' என்பதைக் குறிக்கும் பாசார் (Pasar), கவான் (Kawan - நண்பன்), பாகூஸ் (Bagus - நன்று/அருமை), செகாலா (Segala - எல்லாம்) மற்றும் காப்பி சுசு (Kopi Susu - பால் காப்பி) போன்ற பல்வேறு மலாய் சொற்களை ரமேஷ் இயல்பாகக் கற்றுக்கொண்டான்.
எண்பதுகளின் தொடக்கத்தில், பல தமிழ் குடும்பங்கள் ரப்பர் தோட்டங்களிலேயே கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்து வந்தன. அதன் பிறகு ஏற்பட்ட நகரமயமாக்கலினாலும், புதிய தொழிற்சாலைகளின் வருகையினாலும் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, மெல்ல மெல்ல நகரங்களுக்குக் குடிபெயரத் தொடங்கினர்.
பாரம்பரிய இந்திய உணவு வகைகளுடன், நாசி லெமாக் (Nasi Lemak), ரோட்டி செனை (Roti Canai), மேகி நூடுல்ஸ் (Maggi Noodles) போன்ற உணவுகளும் தமிழர்களின் அன்றாட உணவாக மாறத் தொடங்கின.
இந்த மலேசிய உணவுப் பழக்கத்திற்கு ரமேஷும் மெல்ல அடிமையானான். அந்த உணவுகள் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தன. இதன் மூலம், சாந்தி சமையலிலும் உணவுகள் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவள் என்பதை அவன் உணர்ந்துகொண்டான்.
மலேசியத் தமிழர்களுக்குத் தமிழ் சினிமாவும், குடும்பத்தோடு திரையரங்கிற்குச் செல்வதும் ஒரு பெரிய திருவிழாவைப் போலக் கோலாகலமாக இருக்கும். கோலாலம்பூரில் இருந்த 'ரெக்ஸ்' (Rex) மற்றும் 'ஓடியன்' (Odeon) திரையரங்குகள் தமிழ் திரைப்படங்களை திரையிடுவதில் முன்னணி மையங்களாக விளங்கின.
சாந்திக்கு இளையராஜாவின் பாடல்கள் மீது மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. ரமேஷும் இளையராஜாவின் தீவிர ரசிகன். நல்வாய்ப்பாக, சாந்தி ஒரு ஆடியோ கேசட் கடையில் வேலைக்குச் சேர்ந்ததால், அவர்களுக்கு இலவசமாகவே கேசட்டுகள் கிடைத்தன.
பெரும்பாலான நேரங்களில் அவர்களின் பேச்சு தமிழ் மொழி, இசை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீகம் போன்ற தலைப்புகளைச் சுற்றியே அமைந்திருந்தது. இந்த உரையாடல்களின் ஊடாக, ரமேஷின் வெள்ளந்தியான குணத்தையும், அவன் பெண்கள் மீது கொண்டிருந்த மதிப்பையும் சாந்தி புரிந்துகொண்டாள்.
ஒரு ஆண் நல்லவன், யோக்கியன் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அந்த ஆணை நேசிப்பதில் எந்தப் பெண்ணுக்குத்தான் தயக்கம் இருந்துவிட முடியும்?
சாந்தி காதலிக்க ஆரம்பித்தாள்... அந்தத் தமிழ்மகனை!
சாந்திவின் வீட்டிலிருந்து அவளே சமைத்து கொண்டு வந்த சமையல், அந்த ஊரின் கலப்புப் பண்பாடும், வாழ்க்கை முறையும் சாந்திமீது இவன் கொண்ட ஈர்ப்பை காதலாகவும் மாற்றியது. ஆனால் குடும்பத்தில் இதை எப்படி சொல்வது என்ற குழப்பத்தில் அவன் இருந்தான்.
=====
மலேயாவில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தமிழ்நாட்டுக் கடவுள்களின் மீதும் அபரி மிதமான நம்பிக்கையும் பக்தியும் இருந்தது.அதனால் அவர்கள் சிறுக சிறுக பணத்தை சேமித்து, ஒரு வாரம் சென்னை சுற்றுலா சென்று வருவதை தங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய ஆசையாகக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் ஒருமுறை ரமேஷிடம் பேசும்போது சாந்தி தன் ஆசையைச் சொன்னாள். ரமேஷுக்கும் இது பிடித்திருந்தது. காரணம் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவன் சாந்தியை தன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம், அவள் மீது தான் கொண்ட காதலை குடும்பத்திற்கு தெரிவிக்க முடியும் என்றும் நம்பினான். சாந்தியும் இந்தியா வந்தாள்,சிங்கப்பூர் சிங்காரியாக.
மதுரை மல்லியும், மட்டன் சுக்காவும் சாந்தியை மயங்க வைத்தன. திருத்தணி முருகனைத் தரிசிக்கும் பொழுது, தங்கள் நாட்டில் 1891-ஆம் ஆண்டிலேயே முருகன் வழிபாட்டுத் தலமாக உருவான பத்துமலை முருகன் கோயிலோடு ஒப்பிட்டு, அவனிடம் கதைகதையாகப் பேசினாள்.
சுற்றுலா முடிவுக்கு வந்து, சாந்தி மலேசியா திரும்ப ஆயத்தமானாள்.
"அந்தப் பொண்ணை சென்னைக்குக் கூட்டிட்டுப் போய், ஏதாச்சு வாங்கி கொடுத்து வழியனுப்பி வச்சுட்டு வா ரமேஷ்," என்று ரமேஷின் தாய்தான் அவனிடம் சொன்னாள். அவனும் அப்படியே செய்தான்.
விமான நிலையத்தில் வழியனுப்பும் பொழுது சாந்தி ஒரு கேள்வியைக் கேட்டாள். அது அவனை ரொம்பவே யோசிக்க வைத்த கேள்வி...
"ஆமா ரமேஷ், நான் வயசுக்கு வந்த ஒரு பொண்ணு... நீ ஒரு வாலிபன். பத்து நாளா என் கூடவே தனியா சுத்திட்டு இருக்க... என்னைத் தொடணும்னு கூட உனக்கு ஆசை வரலையா?"
ஐ வான்ட் டு நோ...லா! லா' (Lah) சேர்த்துப் பேசுவதும் மலேசியாவின் பேச்சுவழக்கில் பரவலாகக் காணப்படும் ஒரு தனித்துவமான பாணி.”
அவள் என்னவோ மிக இயல்பாகத்தான் கேட்டாள். ரமேஷ்தான் ஒரு நிமிடம் தடுமாறிப்போனான்.
"சாந்தி... நான் கிராமத்துல வளர்ந்தவன், கூட்டுக்குடும்பத்துல இருந்து வந்தவன். எனக்கு இயல்பாவே பெண்கள் மேல ஈர்ப்பும் மரியாதையும் இருக்கு. ஆனா, அவங்க அனுமதியில்லாம வரம்பு மீறித் தொடக் கூடாதுன்னு சொல்லி வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு சாந்தி... ஆனா, அதை தவறாகப் பயன்படுத்த (Misuse) நான் விரும்பல. இது உனக்குப் புரியுமான்னு தெரியல, ஆனா நான் தெளிவாக இருக்கேன்!"
சாந்தி நெகிழ்ந்துபோனாள். அவனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, "பை... பை..." என்று சொல்லியபடியே விமான நிலையத்தின் நுழைவு வாயிலுக்குள் சென்றாள், வேகமாகக்கைகளை ஆட்டியவாறு உள்ளே நுழைந்தவள், தன் மனதுக்குள் அவனை இன்னும் பத்திரமாகப் பூட்டி வைத்தாள்!
====
அம்மாக்களுக்குப் பொய் பேசத் தெரியாது. உதிர்த்த வெள்ளைச் சோளம் போல 'வெட்டு ஒன்று, துண்டு இரண்டு' என்றும் பேசத் தெரியாது. அளவற்ற அன்பை மட்டுமே வாரி வழங்கத் தெரியும். அதனால்தானோ என்னவோ, சில மகன்களுக்கு அம்மாவை ரொம்பவே பிடித்துப்போகிறது!
"பட்டணத்துக்காரியா இருந்தாலும் பரவாயில்லை... என்னவோ வெளிநாட்டுக்காரிங்கிறியே, இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா?" அவனை விட்டிருமா "நொய்யரிசி உல தாங்காது" ! இதுவும் அம்மா தான்.
அக்கா தன் பேச்சை ஆரம்பித்தாள்."மாமா என்ன நினைப்பாரு? தன் மகளைக் கட்டிக்கலைனாலும் பரவாயில்லை... அவருதான் உன்னை மெட்ராஸுக்குக் கூட்டிட்டுப் போய், காலேஜ் காலேஜா ஏறி இறங்கி, உனக்குச் சீட் வாங்கி கொடுத்து, செலவு பண்ணி படிக்க வச்சாரு. அவருக்கும் ஒரு ஆசை இருக்கும்ல... தன் மருமகன் பெரிய படிப்பு படிச்சிருக்கான், பெரிய உத்தியோகத்துல இருக்கான், கை நிறையச் சம்பளம் வாங்குறான்னு!
அதுவும் மலேசியாவாம்...அது எங்கே இருக்கு, நாம எங்கே இருக்கோம்? ஏதாவது நல்லது கெட்டதுன்னா எப்படிப் போய் வர முடியும், அப்பா...
இதப் பற்றி இனி மேலும் பேச வேண்டாம் என்று எண்ணிய ரமேஷ், மலேசியா திரும்பப் போவதற்கான பயணச் சீட்டு (Ticket) ஏற்பாடுகளைச் செய்யச் சென்னைக்குச் சென்றான். அந்தப் பிரிவு அவனுக்கு அப்போது மிகவும் தேவையானதாகவும் இருந்தது.
=====
வீட்டில் மயான அமைதி நிலவியது. ரமேஷின் பாஸ்போர்ட்டைக் காணவில்லை! யாரும் யாரிடமும் இதைப் பற்றிப் பேசாதது ரமேஷிற்கு மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் அளித்தது.
அஞ்சல் நிலையத்திற்குச் (Post Office) சென்றான். அவனுக்கு ஏரோகிராம் (Aerogramme) எதுவும் வந்திருக்கவில்லை. 'சாந்திக்கு என்னவாயிற்று?' என்ற கேள்வி அவனை முற்றிலும் முடக்கிப்போட்டது.
"ரமேஷ்... இன்னைக்கு உனக்கு ஒரு தபால் சென்னையில இருந்து வந்ததுப்பா. நானே நேரில் கொண்டு வந்து தரலாம்னு இருந்தேன்... நல்லவேளை, நீயே வந்துட்ட!" என்றவாறு தபால்காரர் அவன் கையில் அந்த கவரைக் கொடுத்தார்.
"வாழ்நாள் முழுவதும் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், உன்னை ஒரு முறையாவது கடைசியாகப் பார்த்துவிட்டால் போதும் இன்று...
உன் அன்பு சாந்தி."
'சாந்தி' எனும் எழுத்து சற்று அழிந்திருந்தது. அவள் சிந்திய கடைசிச் சொட்டுக் கண்ணீராலோ என்னவோ?...
மண்ணில் விதைக்கப்பட்ட விதை போல
மௌனமாய் உறங்கும் உடல்கள்...
மேலே சிலுவைகளும்,
கீழே பெயரழிந்த கல்லறைகளும்...
இங்கு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?
எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை...
அந்த மண்ணின் வாசனையைச் சுவாசித்த பின்,
வாழ்க்கையின் அத்தனை பந்தங்களும்
வெற்று மேகங்களாய் விலகிப்போகின்றன.
நேற்று வரை கைகளைப் பற்றியவர்கள்,
இன்று தூசியோடு கலந்துவிட்டார்கள்.
வாழ்வின் சத்தங்கள் ஓயும்
அந்த இறுதி எல்லையில்
நாம் தேடியது என்ன?
நாம் இழந்தது என்ன?
மண் மட்டுமே எல்லாவற்றுக்கும்
இறுதிப் பதில்...
""வாழ்நாள் முழுவதும் உன்னைப் பார்த்துட்டே இருக்கணும் என்று தொடங்கிய உறவு, இப்போது உன்னைப் பார்த்தாலே போதும் என்றாகிவிட்டது! இதைச் சொல்லும்போது கண்ணீர் சிந்தாமல் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்... முடியவில்லை."
"என்னவாயிற்று உனக்கு?" என்று தொடங்கிய கடிதம் அவனுக்குச் சில கசப்பான உண்மைகளைச் சொன்னது.
ஏரோகிராம்கள் முடக்கப்பட்டன... பாஸ்போர்ட் தொலையவில்லை, அவன் சாந்தியைத்தான் தொலைத்திருந்தான்...
நிரந்தரமாக!
22 ஆகஸ்டு 2026