17 April 2026
Next →அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி!
இந்தியாவின் அணுசக்திப் புரட்சி: ஒரு நிசப்தமான சாதனை
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி!
யுவராஜ் சம்பத்
இந்தியா அணு மின்சக்தி உற்பத்தியில் ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று, கல்பாக்கத்தில் 500 மெகாவாட் முன்மாதிரி அதிவேக பிரீடர் உலை (PFBR) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இது இந்தியாவின் அணுசக்திப் பயணத்தில் இரண்டாவது நிலைக்கு அதிகாரப்பூர்வமாக நுழைந்ததைக் குறிக்கிறது. எவ்வித ஆரவாரமும் இன்றி இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்றையச் சூழலில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தை மனதில் கொண்டு, தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவே இந்த நிதானமான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக, இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் நிகழ்ந்திருப்பது நமக்கு மட்டற்ற பெருமிதத்தைத் தருகிறது.
அவ்வையார் திருக்குறளின் பெருமையைச் சொல்லும் பொழுது, "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி" என்று பாடினார். அந்த அணுவைத் துளைத்து மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில், தமிழ்நாட்டின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரண்டு இடங்களில் மின் நிலையங்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. வழக்கமாக இவற்றிற்கு 'யுரேனியம்' தேவைப்படும். ஆனால், உலக அளவில் யுரேனியம் குறைவாகக் கிடைப்பதாலும், அதன் கழிவாக உருவாகும் 'புளூட்டோனியத்தைப்' பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களாலும், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த முறையைத் தவிர்க்கின்றன. ஆனால், ரஷ்யா இதில் சாதனை படைத்து உலக நாடுகளுக்குப் பாதுகாப்பான உலைகளை அமைத்து வருகிறது.
யுரேனியத் தட்டுப்பாட்டைப் போக்க, இந்தியாவின் மணவாளக்குறிச்சி போன்ற கடற்கரை கிராமங்களில் தாராளமாகக் கிடைக்கும் 'தோரியம்' கனிமத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது. தோரியம் மூலம் பாதுகாப்பான மின்சாரத்தைப் பெற முடியும் என்பதோடு, அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தேவையான மூலப்பொருள் இருப்பும் நம்மிடம் உள்ளது. ஒரு டன் தோரியம், 200 டன் யுரேனியம் அல்லது 35 லட்சம் டன் நிலக்கரிக்கு இணையான ஆற்றலைத் தரும். மேலும், இந்த உலைகள் குறைந்த அழுத்தத்தில் இயங்குவதால் வெடிப்பு அபாயம் இல்லை. சோதனைகள் முடிந்த பின், ஓராண்டில் வணிக ரீதியான மின் உற்பத்திக்கு இந்தியா தயாராகிவிடும்.
அணுசக்திக்கு தோரியத்தைப் பயன்படுத்துவது என்பது பாரம்பரியமான யுரேனியம்-புளூட்டோனியம் சுழற்சியிலிருந்து "ஃபெர்டைல்" (Fertile) எரிபொருள் சுழற்சிக்கு மாறும் ஒரு உத்தியாகும். யுரேனியம்-235 இயற்கையாகவே பிளவுபடக்கூடியது (Fissile), ஆனால் தோரியம்-232 முதலில் ஒரு நியூட்ரானை உறிஞ்சி யுரேனியம்-233 ஆக மாற வேண்டும். இந்த யுரேனியம்-233 தான் உண்மையான எரிபொருளாகச் செயல்படுகிறது
இந்தத் தொழில்நுட்பம் கூடங்குளத்தைப் போல ரஷ்யாவைச் சார்ந்தது அல்ல. இது இந்தியர்களால், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பு. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் (IGCAR) வடிவமைக்கப்பட்டு, 'பாவினி' (BHAVINI) நிறுவனத்தால் இது கட்டப்பட்டது. ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைச் செய்த ஒரே நாடு இந்தியா தான்!
இந்தக் கல்பாக்கம் உலையின் மற்றொரு சிறப்பம்சம், இதில் குளிர்விப்பானாக (Coolant) நீருக்குப் பதில் 'திரவ சோடியம்' பயன்படுத்தப்படுகிறது. திரவ சோடியத்தைக் கையாளுவது என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது; ஏனெனில் அது காற்றிலோ அல்லது நீரிலோ பட்டால் உடனடியாகத் தீப்பிடித்து வெடிக்கக் கூடியது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த சோடியம் கையாளுதலில் ஏற்பட்ட விபத்துகளாலேயே இத்திட்டத்தைக் கைவிட்டன. ஆனால், இந்திய விஞ்ஞானிகள் இந்தச் சவாலை முறியடித்து, சோடியம் கசிவு ஏற்படாத வண்ணம் உலையை வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளனர். இதுதான் இந்தியாவின் 'பொறியியல் திறனுக்கு' உலக நாடுகள் தரும் மிகப்பெரிய அங்கீகாரம்."
தமிழ்நாட்டுக் கடற்கரை மணலில் இருக்கும் 'மோனோசைட்' மணலில் இருந்து தோரியத்தைப் பிரித்தெடுப்பதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தோரியத்தைப் பயன்படுத்தி அணு ஆயுதம் தயாரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்தியாவை ஒரு நம்பகமான நாடாகப் பார்க்கிறது. உலகிலேயே தோரியத்தைப் பயன்படுத்துவதை முதன்மை இலக்காகக் கொண்ட நாடு இந்தியா மட்டுமே; நம்மைத் தொடர்ந்து சீனாவும் தற்போது சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
இதே நேரத்தில் ஈரானின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். ஈரான் அணு மின்சாரம் தயாரிப்பதாகக் கூறினாலும், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற சந்தேகமே அமெரிக்காவின் போருக்குக் காரணம். ஈரான் அணு ஆயுதம் பெற்றால், அது இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என அமெரிக்கா அஞ்சுகிறது. ஆனால், இந்தியாவின் தோரியம் தொழில்நுட்பம் என்பது தற்சார்பு மற்றும் அமைதி நோக்கம் கொண்டது என உலகம் நம்புகிறது.
ஒரு நாடு தனது வளத்தைப் பயன்படுத்தும்போது சர்வதேசக் கண்காணிப்பு என்பது இறையாண்மைக்கு உட்பட்டது என்றாலும், உலக அமைதி கருதி இந்தியா சில நிபந்தனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. 2008-ல் அமெரிக்காவுடன் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், நமது சிவில் அணு உலைகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்திவிட்டு, பிற நாடுகளிடமிருந்து எரிபொருளைப் பெறும் உரிமையை இந்தியா பெற்றது. அமெரிக்கா இன்று இந்தியாவை ஒரு 'பொறுப்பான அணுசக்தி நாடு' என்றும், ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மிக முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளி என்றும் கருதுகிறது.
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட 'சாந்தி மசோதா', அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்ததன் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழிவகுத்துள்ளது. இது இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் யாரால் பயன்படுத்தப்படுகிறது என்பதைத்தான் உலகம் பார்க்கிறது. கத்தி மருத்துவர் கையில் இருந்தால் அது சிகிச்சை; அதுவே கொள்ளைக்காரன் கையில் இருந்தால் அது கொலை. இதில் இந்தியா ஒரு மருத்துவர்!
இந்த முயற்சியின் மூலம் தடையற்ற மற்றும் மலிவான மின்சாரம் கிடைத்தால், சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மை பல மடங்கு உயரும். "மேட் இன் இந்தியா" என்பது வெறும் கோஷம் அல்ல என்பதை இந்தத் தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. 'சாந்தி மசோதா' மற்றும் கல்பாக்கத்தின் வெற்றி ஆகிய இரண்டும் இந்தியாவின் 50 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியுள்ளன.
இவ்வளவு பெரிய சாதனை ஊடகங்களில் விவாதிக்கப்படாததற்குக் காரணம், இது ஒரு 'நிசப்தமான புரட்சி' என்பதால் இருக்கலாம். அணுக்கருச் சங்கிலி வினை என்பது சாதாரண மனிதனுக்குப் புரிய வைப்பது கடினம். எது எப்படி இருப்பினும், இந்தச் சாதனையை நிகழ்த்திய மனித ஆற்றலுக்குத் தலைவணங்குவோம்.
தொடரட்டும் இந்தியாவின் வெற்றிகள்!