அன்னம்

17 August 2026

சீனாவின் எழுச்சியும் அதை தொடர்ந்த பின்னடைவும்... வரலாறு கற்றுத் தரும் பாடம்.

சீனாவின் எழுச்சியும் அதை தொடர்ந்த பின்னடைவும்...

வரலாறு கற்றுத் தரும் பாடம்.

 =====================

யுவராஜ் சம்பத்…

சீனாவை வீழ்ந்து கொண்டிருக்கும் நாடு என்று மேற்குலகு நாடுகள் வர்ணிப்பது சரியல்ல. IMF, பன்னாட்டு நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, 2025-ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ந்தது; 2026-க்கு 4.5% வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் (property-sector adjustment) அசையா சொத்துத் துறைச் சீரமைப்பு, உயர்ந்த கடன், பலவீனமான (domestic demand) உள்நாட்டு சந்தையின் தேக்கம், (deflationary pressure) பணவீக்கத்தின் தாக்கம் குறைந்து வரும் labour force மற்றும் (productivity slowdown) உற்பத்தித்திறன் மந்தநிலை ஆகியவை நீண்டகாலச் சவால்களாக உள்ளன.

தற்போது நம்மிடம் கிடைக்கப்பெறும் தரவுகள் இந்த இரட்டை நிலையை இன்னும் தெளிவாக்குகின்றன. ஒரு புறம் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், மின்கலம் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி போன்ற துறைகள் வேகமாக முன்னேறுகின்றன; மறுபுறம் குடும்பக் கடன் மற்றும் உள்நாட்டுத் தேவை பலவீனமாக உள்ளன. 2026 ஜூலையில் சீன வங்கிகளின் புதிய யுவான் கடன்கள் சாதனை அளவில் சுருங்கியது, இந்த முரண்பாட்டின் சமீபத்திய அறிகுறிகளில் ஒன்று.

WTO கால கோடீஸ்வரர்கள்: யார், யார்? எந்தத் துறைகளில், எப்படி?

2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்தபோது, உலகளாவிய வர்த்தகக் கதவுகள் அந்நாட்டிற்குத் திறக்கப்பட்டன. குறைந்த கூலி, அளப்பரிய உற்பத்தித் திறன், இலகுவான தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிலர் பெரும் கோடீஸ்வரர்களாக உருவெடுத்தனர்.

ஜேக் மா (Alibaba) E-Commerce. உலகச் சந்தை சீன உற்பத்தியாளர்களைத் தேடியபோது, சிறு வணிகர்களையும் உலகளாவிய வர்த்தகர்களையும் இணைக்கும் B2B தளத்தை உருவாக்கி உலகப் பணக்காரர்களில் ஒருவரானார்.

ஹுவாங் குவாங்யு (Gome) நுகர்வோர் மின்சாதன சில்லறை விற்பனையாளர். சீன மக்களின் நுகர்வுப் பழக்கம் அதிகரித்ததைப் பயன்படுத்தி முன்னணிச் சில்லறை வர்த்தகரானார்.

வாங் ஜியான்லின் (Wanda) & சூ ஜியாஜின் (Evergrande) ரியல் எஸ்டேட். ஏற்றுமதி வளர்ச்சியால் சீன நகரங்கள் அதிவேகமாக நகர்மயமாக்கப்பட்ட போது, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புத் திட்டங்கள் மூலம் பெரும் கடன் மூலதனத்தைக் கொண்டு பேரரசை உருவாக்கினர்.

பொனி மா (Tencent) தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல் ஊடகம் (WeChat, QQ). சீனா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறியபோது, உள்நாட்டு டிஜிட்டல் தொடர்பு மற்றும் கேமிங் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.

லியோங் வோங்கன் (Sany) கனரக இயந்திரங்கள் உற்பத்தி. நாட்டின் அதிவேக உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஏற்றுமதிக்குத் தேவையான கட்டுமான இயந்திரங்களை உற்பத்தி செய்தார்.

சீனாவின் WTO நுழைவிற்கு பிந்தைய 20 ஆண்டுகளில் (2000-2020) உயர்ந்த இவர்களில் பலர், கடந்த 5-6 ஆண்டுகளில் கடும் பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவைச் சந்தித்தனர்.

அரசு எப்படி உதவியது? இவர்கள் அரசை எப்படிப் பயன்படுத்தினர்?

சீன அரசுக்கும் இத்தகைய தொழிலதிபர்களுக்கும் இடையேயான உறவு மிக நுட்பமானது. "அரசு பாதையை அமைத்துக் கொடுத்தது; இவர்கள் அதைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்."

அரசு செய்த உதவிகள்:

·        சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) & உள்கட்டமைப்பு: ஷென்சென், குவாங்சோ போன்ற கடலோர நகரங்களில் தடையற்ற மின்சாரம், உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, இது சானி போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏற்றுமதிச் செலவைப் பெருமளவில் குறைத்தது.

·        சுதேசிப் பாதுகாப்பு (Great Firewall): கூகிள், ஃபேஸ்புக், அமேசான், ஈபே போன்ற அமெரிக்க நிறுவனங்களைத் தடை செய்தது இந்த "டிஜிட்டல் பாதுகாப்புச் சுவர்" தான். ஜேக் மா மற்றும் பொனி மாவிற்கு, இது போட்டியற்ற மாபெரும் உள்நாட்டுச் சந்தையைத் தந்தது.

·        மலிவு நிலம் மற்றும் வங்கிக் கடன்கள்: அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன்களை வழங்கின; உள்ளூர் ஆட்சி அமைப்புகள் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தன.

·        தொழிலாளர் & வரி சலுகைகள்: தொழிற்சங்கங்கள் உருவாவதைத் தடுத்து குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்தது. ஏற்றுமதி நிறுவனங்களுக்குப் பெரும் வரி விலக்கு கிடைத்தது.

இதற்கு அரசை இணங்க வைக்க இவர்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தினார்கள்:

·        "Guanxi" அரசியல் தொடர்புகள்: கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுடன் தொழில் அதிபர்கள் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டனர். சூ ஜியாஜின் கட்சியின் உயர்மட்டக் குழுக்களில் உறுப்பினராகி தனது பிம்பத்தை வலுப்படுத்தினார்.

·        உள்ளாட்சி அமைப்புகளுக்கு GDP வளர்ச்சி காட்டுவது கட்டாயமாக இருந்ததால், ரியல் எஸ்டேட் அதிபர்கள் "நாங்கள் நகரங்களை உருவாக்குகிறோம், வேலைவாய்ப்பைத் தருகிறோம்" எனக் கூறி நிலம் மற்றும் கடன்களைப் பெற்றனர்.

·        அரசாங்க சட்டங்கள் உருவாவதற்கு முன்பே அதிவேகமாக வளர்வது இவர்களின் உத்தி; ஜேக் மாவின் Alipay அரசு வங்கிக் கட்டுப்பாடுகளை மீறி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை உருவாக்கி, சட்டம் போடுவதற்குள் தவிர்க்க முடியாத அமைப்பாக மாறியது. VIE (Variable Interest Entity) என்ற பகுதி கட்டமைப்பைப் பயன்படுத்தி NYSE/Nasdaq-இல் பட்டியலிட்டனர். VIE என்பது நேரடி உரிமையைக் கொடுக்காமல், ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தையும் கட்டுப்பாட்டையும் மட்டுமே வழங்கும் ஒரு நிதி ஏற்பாடு ஆகும். இது சர்வதேச முதலீட்டாளர்களுக்குச் சீனத் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்பளித்தாலும், அதிக சட்டப்பூர்வ அபாயங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகவே கருதப்படுகிறது.

·        அரசு "டிஜிட்டல் சீனா" என்றபோது டென்சென்ட் நிறுவனம் அரசுக்கு தோள் கொடுத்தது; "நகர்மயமாக்கல்" என்றபோது ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதைத் தங்கள் ஆயுதமாக்கினர்.

அதிகாரத் தொடர்புதான் இவர்களைக் கோடீஸ்வரர்கள் ஆக்கியதா? ஆம், கண்டிப்பாக. சீன வணிக உலகில் இதை அதிகார-மூலதனக் கூட்டணி (State-Crony Capitalism) என்பர். இவர்கள் அந்த அதிகாரத் தொடர்பைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திச் செல்வத்தைக் குவித்தனர். ஆனால் அதே அதிகாரம் 2020-க்குப் பிறகு தன் பிடியை இறுக்கியபோது, இவர்கள் கட்டிய சீட்டுக்கட்டு மாளிகையும் சரிந்தது.

அதே அதிகாரத்தால் இவர்கள் எப்படி வீழ்ந்தனர்?

1.   "அரசை விட யாரும் பெரியவர் இல்லை" (Power Control & Ego): 2015-2020-இல் ஜேக் மா, பொனி மா போன்றோர் உலகளவில் "சீனாவின் முகமாக" மாறினர். 2020 அக்டோபரில் ஷாங்காய் மாநாட்டில் ஜேக் மா சீன அரசு வங்கிகளையும் நிதியமைச்சகக் கட்டுப்பாடுகளையும் "முதியோர் இல்ல மனப்பான்மை கொண்டவை" என்று பகிரங்கமாக விமர்சித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மேலாதிக்கத்திற்கே சவால் விடுப்பதாக இது பார்க்கப்பட்டது; அடுத்த சில நாட்களிலேயே Ant Group-இன் $37 பில்லியன் IPO நிறுத்தப்பட்டு, மா பொதுவெளியில் இருந்து மறைந்தார்.

2.   "Common Prosperity" கொள்கை மாற்றம்: "முதலில் சிலர் பணக்காரர் ஆகட்டும், அப்புறம் நாடு வளரும்" என்ற தெங் சியாவோபிங் கொள்கைக்குப் பதிலாக ஜி ஜின்பிங் "பொதுச் செல்வம்" என்ற புதிய சோசலிசக் கொள்கையைக் கொண்டுவந்தார். ஏழை-பணக்காரர் இடைவெளி கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு ஆபத்து என்பதை உணர்ந்து பெரு நிறுவனங்களின் லாபத்தை அரசு கட்டுப்படுத்தியது. இதனால் Tencent மற்றும் Alibaba தலா $15 பில்லியனுக்கும் மேல் அரசு நிதியத்திற்கு அளிக்க நேரிட்டது.

3.   கடன் குமிழியை உடைத்தல் (ரியல் எஸ்டேட் வீழ்ச்சி): 2020-இல் 'Three Red Lines' கொள்கை மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி கடன் வாங்குவது தடை செய்யப்பட்டது. அரசு வங்கிகள் திடீரெனக் கடன்களை நிறுத்தியதால், $300 பில்லியன் கடனில் இருந்த எவர்கிராண்டால் கடனை அடைக்க முடியவில்லை. அரசு காப்பாற்ற முன்வரவில்லை; சூ ஜியாஜின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

4.   பிக்-டெக் மீதான "டிஜிட்டல் ஒடுக்குமுறை": சீன இளைஞர்களின் தரவுகள் தனியார் நிறுவனங்களின் கைகளில் குவிவதை அரசு விரும்பவில்லை. அலிபாபா மற்றும் மெய்டுவான் போன்ற நிறுவனங்களுக்குப் பல பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது; டென்சென்ட்டின் ஆன்லைன் கேமிங் வணிகத்திற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது; EdTech நிறுவனங்கள் லாப நோக்கமின்றி இயங்க வேண்டும் என்ற சட்டத்தால் அவற்றின் சந்தை மதிப்பு ஒரே இரவில் பூஜ்ஜியமானது.

ஊடக வெளிச்சம் இவர்களின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான தூண்டுதலாக இருந்ததே தவிர, முழுமையான காரணமல்ல. இது சீன அரசுக்கு இவர்கள் மீதான அச்சத்தையும் எரிச்சலையும் ஒரே நேரத்தில் உருவாக்கியது உண்மை.

·        அரசை விஞ்சிய பிரபல்யம்: ஜேக் மா வெறும் தொழிலதிபராக இல்லாமல் சர்வதேச மேடைகளில் 'பாப் ஸ்டார்' போலக் கொண்டாடப்பட்டார். உலகத் தலைவர்கள் சீனாவுக்கு வரும்போது கட்சி அதிகாரிகளை விட ஜேக் மாவைச் சந்திக்கவே அதிக ஆர்வம் காட்டினர். "மக்கள் மத்தியில் கட்சியை விட ஜேக் மாவின் செல்வாக்கு கூடிவிட்டதோ?" என்ற பயம் அரசுக்கு வந்தது. அவரின் ஷாங்காய் உரை உலக ஊடகங்களில் பெரும் செய்தியாக மாறியது; சர்வதேச அளவில் அரசுக்கு ஏற்பட்ட இந்த தர்ம சங்கடம் அடுத்த 48 மணி நேரத்திலேயே அலிபாபா மீதான அதிரடி நடவடிக்கைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.

 

·        எவர்கிராண்டின் ஆடம்பர விழாக்கள்: சூ ஜியாஜின் வாங்கிய சொகுசுப் படகுகள், தனியார் விமானங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தன; உலக ஊடகங்கள் அதை "சீனாவின் லேமன் பிரதர்ஸ் தருணம்" என விவாதிக்கத் தொடங்கின. இதனால் லட்சக்கணக்கான சீன குடிமக்கள் பயந்து எவர்கிராண்ட் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; உள்நாட்டு அமைதியின்மையைத் தடுக்கவே அரசு நிறுவனத்தைக் கையில் எடுத்து, சூ ஜியாஜினை முடக்கியது.

·        மேலைநாட்டு ஊடகங்களின் பிம்பம்: மேலைநாட்டு ஊடகங்களின் இந்த சீன எதிர்ப்பு பிம்பம், இத்தொழிலதிபர்களை "சீனாவை முதலாளித்துவ நாடாக மாற்றும் நாயகர்கள்" என்று கொண்டாடின. கட்சி இதை முதலாளித்துவக் கலாச்சாரப் புகுத்தலாகக் கருதியது.

கடந்த 10 ஆண்டுகளில் உருவான புதிய கோடீஸ்வரர்கள்.

2000-களில் ரியல் எஸ்டேட் மற்றும் பாரம்பரிய இ-காமர்ஸ் மூலம் கோடீஸ்வரர்கள் உருவானார்கள் என்றால், கடந்த பத்தாண்டுகளில் பசுமை ஆற்றல் (clean energy), மின்சார வாகனம் (EV), battery, செயற்கை நுண்ணறிவு (AI), குறும்படச் செயலிகள் (short-video apps) ஆகிய புதுமையான துறைகளே புதிய பில்லியனர்களை உருவாக்கியுள்ளன.

·        ராபின் ஜெங் (CATL): 2011-இல் சிறிய அளவில் தொடங்கிய CATL என்னும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம், டெஸ்லா, BMW போன்ற நிறுவனங்களுக்குப் பேட்டரி வழங்கும் அளவு உயர்ந்து, உலகளாவிய EV பேட்டரி சந்தையில் 40%-க்கும் அதிக பங்கை பெற்றுள்ளது.

·        ஜோங் ஷான்ஷான் (Nongfu Spring & Wantai Bio): நுகர்வோர் பொருட்கள் & பயோடெக் துறைகளில் ஈடுபட்டுள்ள ஜோங் ஷான்ஷான், Nongfu Spring-ஐ பயோடெக் துறையில் காலூன்றி சீனாவின் முதன்மைப் பணக்காரரானார்.

·        ஜாங் யிமிங் (ByteDance/TikTok/Douyin): TikTok-ஐ சர்வதேச அளவில் ஹிட் ஆக்கியதன் மூலம் ஜேக் மாவிற்குப் பிறகு சீனாவின் முன்னணி டிஜிட்டல் கோடீஸ்வரரானார்.

·        வாங் சுவான்ஃபு (BYD): பழைய நிறுவனமாக இருந்தாலும், கடந்த 5-6 ஆண்டுகளில் EV புரட்சியால் அசுர வளர்ச்சி அடைந்து டெஸ்லாவையே தாண்டும் நிலைக்கு வந்தது.

சுருக்கமாக, சீனா உற்பத்தி மையத்திலிருந்து உயர் தொழில்நுட்ப மற்றும் பசுமை ஆற்றல் மையமாக மாறியதே, இந்தப் புதிய கோடீஸ்வரர்கள் உருவானதற்கு காரணம்.

AI துறையில் உருவான கோடீஸ்வரர்கள்

·        டாங் சியாவோ (SenseTime): Computer Vision & முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப நிறுவனத்தை 2014-இல் தொடங்கி உலகின் மிக மதிப்புமிக்க AI ஸ்டார்ட்அப் ஆக உயர்த்தினார்.

·        ஜாங் யிமிங் (ByteDance): AI அல்காரிதம் மற்றும் recommendation engines மூலம் பயனர்களின் விருப்பங்களைத் துல்லியமாகக் கணித்தார்.

·        லியாங் வென்ஃபெங் (High-Flyer Quant/DeepSeek): AI quant trading மூலம் பில்லியன் டாலர்களை ஈட்டிய பின், திறந்த மூல (Open source) AI மாதிரியான DeepSeek-ஐ உருவாக்கி சர்வதேச கவனத்தைப் பெற்றார்.

·        Minimax & Moonshot AI: இந்நிறுவனங்களும் AI (Generative AI & LLMs) மூலம் யூனிகார்ன் நிறுவன அதிபர்களானார்கள்.

 இரும்புக்கோட்டையாக கம்யூனிஸ்ட் சீனா தொடருமா?

தற்போதைய அதிகாரக் கட்டமைப்பு குறுகிய காலத்தில் உடைந்துவிடாது. ஆனால் சைனாவின் சர்வாதிகார அமைப்பு காலப்போக்கில் உள்நாட்டு அழுத்தங்களாலும் பொருளாதார மாற்றங்களாலும் தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படலாம். அதை மாற்றக்கூடிய முக்கிய நான்கு காரணிகள் இதுவாக இருக்கக்கூடும்:

1.   பொருளாதார உடன்படிக்கை தளர்வது: "அரசியல் உரிமைகளைக் கேட்காதே; பதிலாகப் பொருளாதார வளர்ச்சியைத் தருகிறோம்" என்ற எழுதப்படாத ஒப்பந்தம், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, இதனால் குறைந்த வளர்ச்சி, இதன் காரணமாக பொருளாதாரம் மந்தமடைந்ததால், அதிருப்தியை அடக்கக் கட்சி மேலும் தீவிரமான கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும்.

2.   தொழில்நுட்பக் கண்காணிப்பு: சோவியத் யூனியனிலிருந்து சீனாவுக்கு உள்ள முக்கிய வேறுபாடு தொழில்நுட்பம். AI கண்காணிப்பு கேமராக்கள், முகம் அடையாளம் காணுதல், டிஜிட்டல் யுவான், சமூகக் கடன் அமைப்பு மூலம் ஒவ்வொரு குடிமகனையும் துல்லியமாகக் கண்காணிக்க முடிகிறது. இதனால் அமைப்புசார் எதிர்ப்பு உருவாகுவது சுலபம்.

3.   மக்கள் தொகையியல் சவால்: ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையே போதும் எனும் One Child Policy-இன் பக்கவிளைவாக முதியோர் அதிகரித்து, உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிவேகமாகக் குறைந்து வருகிறது. இது பொருளாதார மற்றும் இராணுவ வலிமையைத் தொடர்ந்து தக்கவைப்பதைச் சவாலாக்குகிறது.

4.   தலைமைத்துவ வாரிசுத் திட்டம்: ஜி ஜின்பிங்கிற்குப் பிந்தைய தலைமைத்துவக் கேள்வி இப்போது பேசு பொருள் ஆகி இருக்கிறது. ஒருவர் அதிபராக 10 ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்னும் சட்டத்தை மாற்றி, அவர் தன் ஆயுட்கால வரம்பை நீக்கி அதிகாரத்தை ஒருமுகப்படுத்தியுள்ளார். தற்போது சவால் இல்லை, ஆனால் அடுத்த தலைமை தெளிவாகாத வரை எதிர்காலத்தில் உட்கட்சி மோதல்களும் அரசியல் நிலையற்ற தன்மையும் உருவாக வாய்ப்புள்ளது.

அமெரிக்கா சீனா கூட்டணி சாத்தியமா? இதனால் பிற நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

முழுமையான G2 கூட்டணி (Chimerica) கோட்பாட்டளவில் சாத்தியம் என்று தோன்றினாலும் நடைமுறையில் கடினம். இருப்பினும் இரு நாடுகளும் மோதிக்கொண்டே மறைமுகமாக உலக வர்த்தக விதியைத் தீர்மானிக்கும் சூழல் நிலவுகிறது.

சீனாவின் பலம் உற்பத்தி மையம் மற்றும் அரிய கனிமங்கள். அமெரிக்காவின் பலம் நுகர்வுச் சந்தை, டாலர் ஆதிக்கம், நிதி/தொழில்நுட்ப மேலாண்மை. இரு நாடுகளும் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளதால் மோதல் முற்றும்போது தற்காலிக ஒப்பந்தங்களுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. AI, semiconductor சந்தை, பிராந்திய உற்பத்தி நெட்வொர்க் (வியட்நாம்/மெக்சிகோ வழி ஏற்றுமதியாகும் சீன மூலப்பொருள்) ஆகியவை பொது நலனை உருவாக்குகின்றன.

அதே நேரத்தில் தடைகளாக பார்க்கப்படுபவை: அரசியல் அமைப்புகளின் முரண்பாடு, தைவான் விவகாரம் மற்றும் தெற்காசியக் கடல் இராணுவ மேலாதிக்கப் போட்டி மற்றும் டாலர் ஆதிக்கத்தைக் குறைத்து யுவான்/BRICS நாணய அமைப்பை வளர்க்கும் சீனாவின் முயற்சி.

பிற நாடுகளுக்கான பாதிப்பு:

·        அதிக வரி/தொழில்நுட்பத் தடைகளால் விநியோகச் சங்கிலி முடக்கம், அரிய கனிமங்கள்/சிப் தட்டுப்பாடு மற்றும் உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணிகளால் இந்தியா பாதிக்கப்படுகிறது.

·        China+1 உத்தியால் இந்தியா, வியட்நாம், மெக்சிகோ, இந்தோனேசியா பயனடைகின்றன...

·        BRICS நாடுகள் De-dollarization நோக்கி நகர்கின்றன. UN/WTO போன்ற பலதரப்பு அமைப்புகளின் முக்கியத்துவம் குறைந்து, இரு வல்லரசுகளின் இருதரப்புப் பேச்சே தீர்மானகரமாகிறது.

சீனா நீர்க்குமிழியா, நிலையானதா?

சீனா முழுமையான நீர்க்குமிழியும் அல்ல, தடையற்ற நிலையான வளர்ச்சி கொண்ட நாடும் அல்ல. மேற்குலகம் 30 ஆண்டுகளாக "சீனா நொறுங்கும்" எனக் கணித்தும் சீனா வீழவில்லை, ஆனாலும் கட்டமைப்புச் சிக்கல்கள் கடுமையானவை.

சீனா Solar panels, EV (BYD), EV பேட்டரி (CATL), 5G/AI உள்கட்டமைப்பில் உலகளாவிய ஆதிக்கம் செலுத்துவதால் மேலைநாடுகளே இத்துறைகளில் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. மூலப்பொருள் முதல் இறுதி உற்பத்தி வரை அனைத்தும் ஒரே நாட்டில் கிடைக்கும் முழுமையான விநியோகச் சங்கிலி, Belt and Road மூலம் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியாவுடன் விரிவான வர்த்தகம் கொண்டிருப்பதாலும் சீனா மேலும் மேலும் முன்னேறுகிறது.

முடிவாக, சீனாவின் வளர்ச்சி நொறுங்காது, மந்தமடையும். 8-10% வளர்ச்சி இனி 3-4%-ஆகக் குறையலாம். சீனா உலகப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அங்கம், ஆனால் பழையபடி அசுர வேகத்தில் வளர முடியாமல் உள்நாட்டு மறுசீரமைப்பையும் மக்கள்தொகைச் சிக்கல்களையும் சமாளிப்பதிலேயே அதன் ஆற்றல் அதிகம் செலவிடப்படலாம்.

இந்திய தொழில்துறை கற்ற பாடங்கள்

·        சைனா பிளஸ் ஒன் வாய்ப்பை மூலதனமாக்கி பொருள்களின் உற்பத்திக்கு சீனா மட்டுமே தீர்வு அல்ல என்பதை உலகுக்கு பறை சாட்டியதன் மூலம், இந்தியா மின்னணுத்துறை, செமி கண்டக்டர், மருந்து துறைகளில் மாற்று உற்பத்தி மையமாக தன்னை நிலைநிறுத்த தொடங்கி இருக்கிறது.

·        PLI திட்டங்கள் மூலம், ஏற்றுமதி சிறப்பு மண்டலங்களை உருவாக்கி, அதன் மூலம் தன்னுடைய தொழில் வளர்ச்சியை துரிதப்படுத்தியது.

·        மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களையும் தயாரிக்க ஆரம்பித்தன் மூலம் முழுமையான விநியோக சங்கிலியை இந்தியா நிர்மாணித்திருக்கிறது.

·        ரியல் எஸ்டேட் துறையில் அபரிமிதமான கடனை கொடுத்து தன் கையை சுட்டுக் கொண்ட சைனாவிடமிருந்து இந்தியா கற்ற பாடம், RERA போன்ற சட்டங்களும் வங்கி கடன் பாதுகாப்பு சட்டங்களும் உருவாக காரணங்களாக இருந்தன / உருவாக்கப்பட்டன.

·        அலிபாபா போன்ற நிறுவனங்களின் சிறகுகளை நசுக்கிய சைனா உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இதனால் தொழில் அதிபர்களை எதிரியாக பார்க்கக்கூடாது என்ற ஒரு பாடத்தை இந்தியா கற்றுக் கொண்டது. இதனால் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்திற்கு அபரிமிதமான ஆதரவை இந்தியா தந்தது.

·        மேலும் பசுமை எரிவாயு, கிரீன் ஹைட்ரஜன், சோலார் மின் உற்பத்தி, EV பேட்டரி போன்றவற்றிலும் தன்னுடைய பார்வையை திருப்பி அந்தத் துறையிலும் இந்தியா சாதிக்க முயற்சி செய்கிறது.

சீனா அளவிற்கு அதிவேகமான வெற்றியை இந்தியா பெறவில்லை எனினும் அது பயணிக்கும் திசை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது.

முடிவாக வரலாறு கற்றுத் தரும் பாடம்:

கட்டுப்பாடற்ற கடனும், எல்லை மீறிய அரசாங்கத் தலையீடும் எந்தவொரு பெரிய பொருளாதாரச் சாம்ராஜ்யத்தையும் சரிவை நோக்கித் தள்ளும்.

சீனாவின் உற்பத்தி உத்திகளையும் (PLI, உள்கட்டமைப்பு), அதன் வீழ்ச்சியிலிருந்து கடன் மற்றும் கடும் அரசாங்கக் கட்டுப்பாடுகளின் ஆபத்துகளையும் இந்தியா கற்றுக் கொண்டுள்ளது.

சீனா போல அதிவேகமாக இல்லாவிட்டாலும், ஜனநாயகச் சட்டகத்திற்குள் நின்று நிலையான, பலதரப்பட்ட விநியோகச் சங்கிலியை உருவாக்க முயல்கிறது.

வரும் காலங்களில் இனி ஒரு நாட்டை மட்டும் நம்பியிருக்கும் வர்த்தக மாதிரி நீடிக்காது. அமெரிக்கா-சீனா போட்டியில், இந்தியா போன்ற நாடுகள் வெறும் அசெம்பிளி மையமாக இல்லாமல் மூலப்பொருள் தயாரிப்பு, உயர் தொழில்நுட்பம், பசுமை ஆற்றலில் சுயசார்பு அடைவதே உண்மையான பொருளாதார ஆதிக்கத்தைத் தரும்.

இதுதான் வரலாறு கற்றுத் தரும் பாடம், இந்தியாவிற்கும் உலகிற்கும்.